சிறுத்தையை விரட்டிய வீரத்தாய்!
புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரத்தமிழச்சி பற்றி சங்க கால இலக்கியங்களில் படித்திருப்போம். இன்று விறகால் சிறுத்தையை அடித்து விரட்டி மகளின் உயிரை மீட்டெடுத்திருக்கிறார், வீர பெண்மணி ஒருவர்.
புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரத்தமிழச்சி பற்றி சங்க கால இலக்கியங்களில் படித்திருப்போம். இன்று விறகால் சிறுத்தையை அடித்து விரட்டி மகளின் உயிரை மீட்டெடுத்திருக்கிறார், வீர பெண்மணி ஒருவர். அவரது பெயர் முத்துமாரி. தமிழக அரசு அவருக்கு, துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
முத்துமாரியின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காவலாக்குறிச்சி மருதபுரம் புதூர் கிராமம். பெற்றோர் வைரவசாமி-சண்முகத் தாய் இருவரும் தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே உள்ள தெற்கு மலை தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். குழந்தை பருவம் முதலே பெற்றோருடன் தேயிலை தோட்டத்தின் வாசத்திலேயே வளர்ந்த முத்துமாரி, பள்ளிக்கூடத்தின் வாசனை அறியாமல் முழுநேர தோட்டத்தொழிலாளியாகவே மாறியிருக்கிறார். அங்கு உடன் வேலை பார்த்த அய்யப்பராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அதன் பிறகு வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு இடம்பெயர்ந்திருக்கிறார். இந்த தம்பதிக்கு முதலில் பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகள் தவமிருந்து மகன் மணிகண்டனை பெற்றெடுத்திருக்கிறார். பின்னர் மகள் சத்யா பிறந்திருக்கிறார்.
முத்துமாரியின் கணவர், அவரை விட்டு பிரிந்து வேறு ஊருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையே முதுமை காரணமாக முத்துமாரியின் பெற்றோர் சொந்த ஊரான காவலாக்குறிச்சிக்கு சென்று விட்டனர். முத்துமாரியின் மகன் மணிகண்டனும் அவர்களுடன் சென்றுவிட்டார். அவர் தற்போது வெங்கடேசுவரபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் கிராம கமிட்டி மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்.
வால்பாறை தேயிலை தோட்டத்தில் முத்துமாரி மகள் சத்யாவுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார். சத்யா அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். தனிமையில் வசித்து வந்த தாய்க்கும், மகளுக்கும் சிறுத்தை ரூபத்தில் விபரீதம் ஏற்பட்டிருக்கிறது. மகளின் உயிரை காப்பாற்ற முத்துமாரி விஸ்வரூபம் எடுத்து விட்டார். தாய்மைக்கே உரித்தான பந்தம், பயமுறுத்தும் சிறுத்தையுடன் போராடும் மன வலிமையை முத்துமாரிக்கு கொடுத்து மகளை மீட்க வைத்திருக்கிறது.
முத்துமாரி அடுப்பெரிக்கவும், குளிரை போக்கவும் தேவையான விறகுகளை வீட்டின் வெளிப்பகுதியில் சேகரித்து வைத்திருந்திருக்கிறார். கடந்த மே மாதம் 25-ந்தேதி மாலை 6.30 மணி அளவில் வெளியே குவித்து வைத்திருந்த விறகுகளை வீட்டுக்குள் அடுக்கி வைக்கும் பணியில் முத்துமாரியும், மகள் சத்யாவும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை உயிரை குடித்து விடும் நோக்கில் சத்யாவின் மீது சீறி பாய்ந்திருக்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் சத்யாவின் கழுத்து பகுதியில் கவ்விக்கொண்டு அவரை இழுத்துச் சென்றுவிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துமாரி, அங்கு கிடந்த விறகுக்கட்டையை எடுத்துக்கொண்டு சிறுத்தையை விரட்டி சென்றிருக்கிறார். சிறுத்தையின் சீற்றத்தை கண்டு பதைபதைப்பில் இருந்தவர், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சிறுத்தையின் முதுகில் ஓங்கி அடித்துள்ளார். அவரின் ஆக்ரோஷமான தாக்குதலில் வலி தாங்காமல் நிலை குலைந்துபோன சிறுத்தை சத்யாவை அங்கேயே போட்டு விட்டு தேயிலை தோட்டத்துக்குள் ஓடி மறைந்து விட்டது. தன்னுடைய மகளின் உயிரை காப்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட முத்துமாரி, மகளுக்கு எமனாக வந்த சிறுத்தையை விரட்டியடித்து அவளை காப்பாற்றி விட்டார்.
முத்துமாரியின் வீரதீர செயலை பாராட்டி, தமிழக அரசு ஆண்டு தோறும் வழங்கும் கல்பனா சாவ்லா விருதை இந்த ஆண்டு அவருக்கு வழங்கி உள்ளது. சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருதுடன், ரூ.5 லட்சம் காசோலை மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிலையில் முத்துமாரி தனது மகள் சத்யாவுடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்து விட்டார். சத்யாவை, மகன் படித்துவரும் அதே பள்ளியில் 6-வது வகுப்பில் சேர்த்து படிப்பை தொடர வைத்திருக்கிறார். முத்துமாரியை பேட்டி எடுக்க சென்றிருந்தோம். அப்போது அவருடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூட நிர்வாகம் முத்துமாரியை அழைத்து கவுரவித்தது. ‘சிறுத்தையை விறகுக்கட்டையால் அடித்து விரட்டிய வீரமங்கை’ என்று அறிமுகப்படுத்திய உடனேயே எதிரொலித்த மாணவ-மாணவிகளின் கரவொலி அடங்குவதற்கு பல நிமிடங்கள் ஆனது. சிறுத்தையுடன் போராடி மகளை காப்பாற்றிய சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் முத்துமாரி பகிர்ந்து கொண்டார்.
‘‘நான் பிறந்து வளர்ந்தது தேயிலை தோட்ட குடியிருப்பில்தான். தேனி மாவட்டம் வெள்ளிமலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்த போது எனக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு கணவருடன் வால்பாறை அரசு தேயிலை தோட்டத்தில் பெரிய கல்லாறு பகுதியில் ரேஞ்ச்-6 பிரிவில் வேலை செய்து வந்தேன். காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 4 மணிக்கு வீடு திரும்புவோம். தினமும் ரூ.300 வரை கூலி கிடைக்கும். நாங்கள் தோட்ட வளாகத்தில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பில் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தோம். வீட்டின் முன்பு மழை, வெயில் அடிக்காத வகையில் சிறிய பந்தல் போட்டிருந்தோம். சம்பவத்தன்று மாலை நேரத்தில் மழை தூறிக்கொண்டே இருந்தது. அப்போது வீட்டின் முன்பு பந்தலுக்குள் கிடந்த விறகு குவியலை வீட்டின் உள்ளே எடுத்து வைக்க முடிவு செய்தேன். வீட்டுக்கு வெளியே மகள் சத்யா நின்று கொண்டு ஒவ்வொரு கட்டையாக எடுத்து உள்ளே நீட்டினாள். நான் வீட்டுக்கு உள்ளே நின்று விறகு கட்டைகளை வாங்கி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது சத்யா திடீரென்று ‘‘அம்மா என்னை காப்பாற்று’’ என்று கூக்குரலிட்டாள். அதன்பிறகு சத்தம் கேட்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தேன். அவளை காணவில்லை. சற்று தூரத்தில் ஒரு சிறுத்தை அவளுடைய கழுத்து பகுதியை வாயால் கவ்விக்கொண்டு தேயிலை தோட்டத்துக்குள் இழுத்துச் சென்றது. அது மிகப்பெரிய உருவமாக இருந்தது. நான் அதற்கு முன்பு சிறுத்தையை பார்த்தது கிடையாது. கண் முன்னே மகளை சிறுத்தை இழுத்து சென்றதை பார்த்து பதற்றமடைந்தேன். என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தேன். பக்கத்து வீட்டில் சென்று யாரையேனும் உதவிக்கு அழைத்தால் அதற்குள் மகளை தோட்டத்துக்குள் இழுத்துச்சென்று கொன்று விடும். மகளின் நிலையை பார்த்தவுடன் திடீரென்று ஒரு அசட்டு தைரியம் வந்தது. அங்கு கிடந்த ஒரு விறகுக்கட்டையை தூக்கினேன். அதிக எடை கொண்ட, தூக்க முடியாத கட்டை அது. ஆவேசத்தில் அதை தூக்கி சிறுத்தையை பின்தொடர்ந்து 20 அடி தூரத்துக்கு மேல் ஓடினேன். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த கட்டையால் சிறுத்தையின் முதுகில் ஓங்கி அடித்தேன். நல்ல வேளை நான் அடித்த அடி சிறுத்தையின் மீது சரியாக விழுந்தது. வலி தாங்காமல் அந்த சிறுத்தை என்னுடைய மகளை கடித்திருந்த கடிவாயை விட்டு விட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டது. சிறுத்தை அழுத்தமாக கடித் திருந்ததால் அவள் உடல் முழுவதும் ரத்தமாக காட்சி அளித்தது. அதை பார்த்து பதறிப்போனேன். அவளை தூக்கிக்கொண்டு கூச்சலிட்டேன். அதற்குள் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவளை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு 12 நாட்கள் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர்களுடைய சிகிச்சை முறையால் சிறுத்தையின் வாயில் சிக்கிய மகள் மறுபிறவி எடுத்து இருக்கிறாள். சிறுத்தை கடித்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீள்வதற்கு டாக்டர்கள் செல்போனில் புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவற்றின் படங்களை காண்பித்து பயிற்சியும் அளித்தனர்.
சிறுத்தையுடன் போராடி மகளை மீட்ட அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் முழுவதும் சிலிர்க்கிறது. நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்தால் இரவில் தூக்கம் வருவதில்லை. என்னுடைய குழந்தைகளுக்காகத்தான் உயிர் வாழ்கிறேன். எனவே மகள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் நிலையில், அவளை காப்பாற்ற வேண்டும் என்ற மன தைரியத்தில்தான் தூக்க முடியாத கட்டையை கூட தூக்கி சிறுத்தையை அடிக்க முடிந்தது. அந்த கட்டையை எப்படி தூக்கினேன் என்று எனக்கே வியப்பாக இருக்கிறது. சிறுத்தையை அடிக்கும்போது அந்த கட்டை மகள் மீது பட்டு விடக்கூடாதே என்ற பயமும் இருந்தது. மாணவ-மாணவிகள் குறிப்பாக பெண் குழந்தைகள் எப்போதும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழந்து விடக்கூடாது’’ என்று முத்துமாரி மாணவ-மாணவி களுக்கு தன்னம்பிக்கையூட்டினார்.
பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் குகன், உதவி தலைமை ஆசிரியை அமிர்தவல்லி மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘சத்யா எங்களுடைய பள்ளிக்கூடத்தில் படிப்பதை பெருமையாக கருதுகிறோம். அவரது தாயாரின் போராட்ட குணத்தை எங்களது பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளையும் அறியச்செய்து உள்ளோம். வீரத்துடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று முத்துமாரியை உதாரணமாக எடுத்துக்கூறி ஊக்கப்படுத்தியும் வருகிறோம்’’ என்றனர்.
முத்துமாரி சொந்த ஊருக்கு வந்த பிறகு அவருக்கு வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. பெற்றோர் சில ஆடுகளை வீட்டில் வளர்த்து வருகின்றனர். அதில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அதனால் அச்சமின்றி மீண்டும் வால்பாறைக்கு சென்று தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு முத்துமாரி ஆர்வம் காட்டுகிறார்.
‘‘வால்பாறை தேயிலை தோட்டத்தில் நான் வேலைக்கு சேர்ந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையில் இருந்தனர். தோட்டத்தில் புகுந்த காட்டு யானை 3 பேரை கொன்றது. அந்த சம்பவத்திற்கு பிறகு படிப்படியாக தொழிலாளர்கள் பொள்ளாச்சி மற்றும் பிற தோட்ட வேலைகளுக்கு சென்று விட்டனர். தற்போது சிறுத்தையால் உயிரிழப்பு ஏற்படுவதால் 150-க்கும் குறைவானவர்கள் மட்டுமே அங்கு வேலை செய்கின்றனர். இதனால் தேயிலை காடு படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. எனவே, இதற்கு மாற்றாக அங்குள்ள தொழிலாளர்களை குன்னூர், கோத்தகிரியில் உள்ள அரசு தேயிலை தோட்டங்களுக்கு பாதுகாப்பு கருதி மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
முத்துமாரியின் பெற்றோர் சாதாரண ஆஸ்பெட்டாஸ் கூரை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அது தவிர அவர்களுக்கு நிலம், வீடு எதுவும் கிடையாது. சிறுத்தையின் வாயில் சிக்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று சத்யா உயிர் பிழைத்த தகவல் அறிந்ததும் அவருடைய தந்தை அய்யப்பராஜ் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடோடி வந்து மகளை உடன் இருந்து கவனித்திருக்கிறார். இது பிரிந்திருந்த குடும்பத்துக்கு ஆறுதலையும் தந்துள்ளது.
Related Tags :
Next Story