பட்டாசுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை


பட்டாசுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை
x
தினத்தந்தி 27 Aug 2018 4:30 AM IST (Updated: 26 Aug 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சிவகாசி,

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று சிவகாசி ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன் வரவேற்று பேசினார். பொது செயலாளர் இளங்கோவன் உறுதி மொழி வாசித்தார். அதனை தொடாந்து அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் டான்பாமா தலைவர் ஆசைதம்பி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன், டிப்மா தலைவர் ராதாகிருஷ்ணன், மாரியப்பன், மகேஸ்வரன், அபிரூபன், கணேசன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:–

பலரை சந்தோ‌ஷப்படுத்தும் இந்த தொழில் நிச்சயம் காக்கப்படவேண்டும். இந்த கூட்டத்தில் 6 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளீர்கள். இந்த 6 தீர்மானங்களும் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டியவை. பட்டாசுகளுக்கு பல காலக்கட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் வந்துள்ளன. அந்த தடைகள் எல்லாம் தாண்டி வந்துள்ளீர்கள். பட்டாசு தொழில் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து உதவிகளையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். இந்த தொழில் சிறக்க அவர் எப்போதும் விரும்புகிறவர். பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை கூறி பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை வேண்டும் என்று சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ள இந்த தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும். நான் நம்பிக்கையாக இருப்பது போல் நீங்களும் நம்பிக்கையாக இருங்கள்.

கடந்த தீபாவளியின் போது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் யாரும் பட்டாசு வெடிக்கவில்லை. ஆனால் அங்கு மாசு அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் என்று கூறப்படுகிறது. பட்டாசு வெடிப்பதன் மூலம் மாசு ஏற்படாது என்று அறிவியலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 800–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பல மாலை நேரங்களில் சோதனை செய்து பார்க்கப்படுகிறது. அப்படி சோதிக்கும் போது மாசு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

எனவே பட்டாசால் மாசு ஏற்படாது, அதே போல் தீபாவளி பண்டிகைக்கு தற்போது ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து தீபாவளி பண்டியை கொண்டாட வருபவர்கள் அடுத்த நாளே தங்களது பணிக்கு திரும்ப வேண்டி உள்ளது. கேரளாவில் ஓணத்துக்கும், கர்நாடகாவில் தசராவுக்கும் அதிக நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதை காரணம் காட்டி தீபாவளிக்கு 5 நாட்கள் கேட்கிறீர்கள். இது குறித்து முதல்–அமைச்சரிடம் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

பட்டாசுக்கடை உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான எளிய நடைமுறை பின்பற்ற வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறை ஆணையாளர்கள் வழங்கிய நிரந்தர உரிமம் பெற்ற பட்டாசுக்கடை உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க வேண்டும். பண்டிகை காலத்தில் 30 நாட்களுக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக உரிமங்கள் வழங்கப்பட வேண்டும்.

அந்நிய நாட்டு பட்டாசுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முழுமையாக கொண்டாட விடுமுறையை 5 நாட்களாக அறிவிக்க வேண்டும். உரிமம் இல்லாமல் விற்பனைக்கு வழி வகுக்கும் ஆன்–லைன் பட்டாசு வணிகத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் கந்தசாமிராஜன் நன்றி கூறினார். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பட்டாசு வணிக மலர் என்ற சிறப்பு மலரை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டார்.


Next Story