பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:00 AM IST (Updated: 27 Aug 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருகட்டமாக மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் வழங்கல், நீர் நிலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கே.எம்.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். முன்னதாக பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இதில் மகளிர் திட்ட சமுதாய ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரணி முடிவில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் புதுஊருணியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

கண்டனூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேசுவரன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இதில் சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், பேரூராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், சுயஉதவி குழு பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி கண்டனூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியின்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முடிவில் நல்லதண்ணீர் ஊருணி தூய்மை பணி நடைபெற்றது.

திருப்பத்தூர் பேரூராட்சி சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பேரூராட்சி பணியாளர்கள், வணிகர் சங்கத்தினர், பள்ளி மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர். காந்தி சிலையில் இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையம், மதுரை ரோடு, அண்ணா சிலை வழியாக பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது. பின்னர் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சங்கிலியான் கோவில் குளத்தை சுத்தம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அலுவலக தலைமை எழுத்தர் முருகன், துப்புரவு மேற்பார்வையாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று புதுவயல் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கானாடுகாத்தான் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் செட்டியார் ஊருணி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.


Next Story