திருச்சி காவிரி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி


திருச்சி காவிரி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 27 Aug 2018 4:30 AM IST (Updated: 27 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் அஸ்தி திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி மரணமடைந்தார். அவரது அஸ்தி நாடு முழுவதும் நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 6 இடங்களில் கரைப்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் அஸ்தி கலசம் கடந்த 22-ந்தேதி சென்னை கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. திருச்சியில் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. இல.கணேசன் தலைமையில் வாஜ்பாய் அஸ்தி கலசம் கொண்டு வரப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் அஸ்தி எடுத்து வைக்கப்பட்டுபா.ஜ.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டனர். வாகனம் சமயபுரம் டோல்கேட், அரியமங்கலம் பால்பண்ணை, பொன்மலை ஜி கார்னர், பீமநகர், உறையூர் பாளையம்பஜார், சிந்தாமணி அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்தடைந்தது. வருகிற வழியில் அஸ்திக்கு பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன. வாஜ்பாய் புகைப்படம் மற்றும் அஸ்தி ஒரு மேடையில் வைக்கப்பட்டன. இல.கணேசன், த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், தே.மு.தி.க. சார்பில் விஜயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாயின் அஸ்திக்கு புரோகிதர் வேத மந்திரங்கள் முழங்க சம்பிரதாய பூஜை நடத்தினர். அதன்பின் காலை 11 மணி அளவில் வாஜ்பாயின் அஸ்தியை இல.கணேசன் உள்பட பா.ஜ.க.வினர் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர்.

Next Story