தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்


தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:15 AM IST (Updated: 27 Aug 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சங்க பொதுச் செயலாளர் முத்துபாண்டியன் கூறினார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். டெல்டா மண்டல செயலாளரும், முன்னாள் மாநில இணைச் செயலாளருமான மணிவண்ணன், மாவட்ட துணைத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் புலிகேசி வரவேற்றார்.

சங்கத்தின் வரவு-செலவு கணக்கை மாவட்ட செயலாளர் கிட்டப்பா வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் சோலைமுத்து உறுதிமொழியை வாசித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜசெல்வம் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் மாநில கவுரவ பொது செயலாளர் குப்புசாமி, மாநில பொதுச்செயலாளர் முத்துபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

இதையடுத்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்துபாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- சங்க பணியாளர்களுக்கும், அங்காடி பணியாளர்களுக்கும் நல்ல ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கும், நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் இடையேயான ஊதியத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். எங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை கண்டித்து செப்டம்பர் மாதம் இறுதியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் சங்கரன், துரைக்கண்ணு, மண்டல இணைச்செயலாளர் கணேசன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் உள்பட அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் பிரபா நன்றி கூறினார். 

Next Story