சோழவந்தான் அருகே பாசன கால்வாயில் மோட்டார்சைக்கிள் பாய்ந்து சிறுவன் மாயம்: தாய், தந்தையுடன் சென்ற போது சம்பவம்
சோழவந்தான் அருகே பாசன கால்வாயில் மோட்டார்சைக்கிள் பாய்ந்ததில் தாய்,தந்தையுடன் தண்ணீரில் மூழ்கிய சிறுவன் மாயமானான். அவனை கிராமத்தினர் தேடிவருகின்றனர்.
சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் மம்முட்டிபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது35). இவருடைய மனைவி சத்யா, மகன் கிருத்திக்ராஜா (4). இவர்கள் 3 பேரும் வைத்தான்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்குகொண்டு இருந்தனர்.
அப்போது பாசன கால்வாய் ஓர சாலையில் வந்துகொண்டு இருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் விஜயகுமாரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி பாசன கால்வாயில் பாய்ந்தது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கரைபுரண்டு ஓடும் கால்வாய் தண்ணீரில் மூழ்கி இழுத்துச்செல்லப்பட்டனர்.
இதையடுத்து விஜயகுமாரும், சத்யாவும் கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீரில் குதித்து 2 பேரையும் காப்பாற்றி கரைக்குகொண்டுவந்தனர். நீரில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனின் கதிஎன்னவென்று தெரியவில்லை. மாயமான அவனை தொடர்ந்து கிராமத்தினர்தேடிவருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு துறையினர் அங்கு சென்று சிறுவனை தேடும்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.