ஏரியில் இருந்த மரங்களை வெட்டி கடத்த முயற்சி
விருத்தாசலம் அருகே ஏரியில் இருந்த மரங்களை சிலர் வெட்டி கடத்த முயன்றனர். இதையறிந்த பொதுமக்கள், விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த நிலையில், தனிநபர்கள் சிலர், ஏரியின் உள்ளே இருந்த கருவேல மரத்தை வெட்டினர். இதுபற்றி அறிந்த, கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். அதற்குள் மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதையடுத்து அங்கு இருந்த பொக்லைன் எந்திரத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த, மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து கிராம மக்களை சமாதானம் செய்தனர்.
அப்போது, கருவேல மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம், மற்றும் மரம் வெட்டுவதற்கு பயன்படும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story