சென்னிமலை அருகே பந்தய மோட்டார் சைக்கிள்களை வழிமறித்த கிராம மக்களால் பரபரப்பு
சென்னிமலை அருகே பந்தய மோட்டார்சைக்கிள்களை வழிமறித்த கிராமமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை,
ஈரோடு ரேஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா முடிந்து ஒரு வாரத்துக்கு பிறகு மோட்டார்சைக்கிள், கார் பந்தயம் நடைபெறும். அதன்படி நேற்று ஈரோட்டில் இருந்து பந்தயம் தொடங்கியது. இதில் சுமார் 40–க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள், கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.
வாகனங்கள் ரங்கம்பாளையம், வெள்ளோடு, சென்னிமலை வழியாக ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எல்லக்காடு என்ற இடத்தை அடைந்தது. பின்னர் அங்கிருந்து பிரிந்து ஆலாம்பாளையம் என்ற கிராமத்துக்குள் நுழைந்தது.
அங்கு வாகனங்கள் புகைபோக்கியை கழற்றிவிட்டு சத்தம் எழுப்பியபடி வேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே பந்தய வீரர்களிடம் மோட்டார்சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளார்கள். அதற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற ஒரு பந்தய வீரர், தனது 2 கால்களையும் உயர்த்தி அவர்களை உதைப்பது போல் காட்டிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் அதன் பின்னால் வந்த மற்ற மோட்டார்சைக்கிளை வழிமறித்தார்கள். மேலும் ஒரு காரையும் தடுத்து நிறுத்தினார்கள். இதுகுறித்து ஆலாம்பாளையம் கிராமமக்கள் அருகே உள்ள ராசாப்பாளையம் கிராமமக்களிடமும் கூறினார்கள். உடனே அவர்களும் அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள், கார்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ஆலாம்பாளையம் கிராமத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘மோட்டார்சைக்கிளில் சென்ற பந்தய வீரர் ஒருவர் கால்களை உயர்த்தி எங்களை உதைப்பது போல் காட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.
அதற்கு போலீசார் ‘நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதி அளித்தார்கள். அதனை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் மோட்டார்சைக்கிளையும், கார்களையும் விடுவித்தார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.