முகம் பார்க்காமல் ‘முகநூல்’ மூலம் பழக்கம்: பெண் என நினைத்து நாகர்கோவில் வந்தவர், ரூ.83 ஆயிரத்தை இழந்தார்


முகம் பார்க்காமல் ‘முகநூல்’ மூலம் பழக்கம்: பெண் என நினைத்து நாகர்கோவில் வந்தவர், ரூ.83 ஆயிரத்தை இழந்தார்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:15 AM IST (Updated: 27 Aug 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

முகம் பார்க்காமல் ‘முகநூல்’ மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், பெண் என நினைத்து நாகர்கோவில் வந்தவர் ரூ.83 ஆயிரத்தை இழந்தார். அவரை மிரட்டி கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

நாகர்கோவில்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 45). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது சொந்த ஊரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனசேகரனுக்கு முகநூல் மூலம் ஒரு பெண்ணிடம் இருந்து நட்புக்கான அழைப்பு வந்தது. பொதுவாக முகநூலில் ஆண்கள் தான் பெண்களுக்கு நட்புக்கான அழைப்பு விடுப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணே தனக்கு நட்பு அழைப்பு கொடுத்திருக்கிறாரே? என்று நினைத்த தனசேகரன் உடனே அந்த பெண்ணை நண்பராக்கி கொண்டார். பின்னர் 2 பேரும் முகநூல் மூலம் பேசிக்கொண்டனர். அப்போது தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அந்த பெண் கூறினார். அதைத் தொடர்ந்து 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். வாட்ஸ்-அப் மூலமும் நட்பு தொடர்ந்தது. செல்போன் எண் கிடைத்ததும் அந்த பெண்ணுக்கு தனசேகரன் போன் செய்துள்ளார். ஆனால் அவர் பேசவில்லை. இதுபற்றி தனசேகரன் கேட்டபோது, தன்னால் பேச முடியாது, காது மட்டும் தான் கேட்கும் என்று அந்த பெண் வாட்ஸ்-அப் மூலம் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் சிகிச்சை தொடர்பாக அந்த பெண்ணை மதுரைக்கு வருமாறு தனசேகரன் அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்தார். மதுரைக்கு தனியாக வர முடியாது என்றும், நாகர்கோவிலுக்கு வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.

இதை நம்பிய தனசேகரன் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் நாகர்கோவிலுக்கு வந்தார். வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு அந்த பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அந்த பெண், தற்போது இரவு நேரம் என்பதால் பெற்றோர் என்னை வெளியே அனுப்ப மாட்டார்கள். எனவே என் தம்பியை அனுப்பி வைக்கிறேன். அவன் உங்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து வருவான். எனவே அவனுடன் நீங்கள் வந்து விடுங்கள்“ என்று கூறியிருக்கிறார்.

வெளுத்ததெல்லாம் பால் என்று அந்த பெண் கூறியதை தனசேகரன் அப்படியே நம்பி விட்டார். அதைத் தொடர்ந்து அந்த பெண் கூறியது போலவே ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் தனசேகரன் அவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென ஒரு மறைவான இடத்துக்கு சென்றுள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த வாலிபர் திடீரென தனசேகரனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனசேகரன் செய்வதறியாது திகைத்தார். தான் வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

எனவே தனது ஏ.டி.எம். கார்டை அந்த வாலிபரிடம் கொடுத்து ரகசிய எண்ணையும் கூறியுள்ளார். மேலும் அவரது செல்போனையும் அந்த வாலிபர் பறித்துக் கொண்டார். இதனையடுத்து தனசேகரனை அந்த வாலிபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கோட்டார் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு தப்பிச் சென்றார். பின்னர் தனசேகரனின் ஏ.டி.எம். கார்டு மூலம் அந்த வாலிபர் ரூ.83 ஆயிரத்து 500-ஐ எடுத்தார்.

இந்த நூதன மோசடி பற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் தனசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்கள். முகம் பார்க்காமல் முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், பெண் என நினைத்து நாகர்கோவிலுக்கு வந்தவர் ரூ.83 ஆயிரத்தை இழந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story