மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் இளம் பெண் உள்பட 5 பேர் கண்டுபிடிப்பு
மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண் உள்பட 5 பேரை போலீசார் கண்டு பிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதற்காக ஒவ்வொரு காவல் துணை கோட்டத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், அந்தந்த பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு இளம்பெண் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்படி கடந்த 28-10-2012 அன்று காணாமல் போன கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சத்தியசாய் நகரை சேர்ந்த ஏகாம்பரம் மகன் வெங்கடேசன்(27), 9-11-2014 அன்று காணாமல் போன திருப்பாதிரிப்புலியூர் அக்கிள் நாயுடு தெருவை சேர்ந்த சையத் ஜாபர் மகன் சையத் முகம்மது குலாம், 6-10-2014 அன்று காணாமல் போன கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகரை சேர்ந்த நாகராஜன் மகன் மகேந்திரன்(39) ஆகியோரை கடலூர் துணை கோட்ட தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் கடந்த 25-11-2016 அன்று காணாமல் போன பரங்கிப்பேட்டை அருகே உள்ள மஞ்சக்குழி பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணை சிதம்பரம் துணை கோட்ட தனிப்படையினரும், 7-7-2014 அன்று காணாமல் போன விருத்தாசலம் சித்தலூரை சேர்ந்த அசோக்குமார்(32) என்பவரை விருத்தாசலம் துணை கோட்ட தனிப்படை போலீசாரும் கண்டுபிடித்தனர்.
காணாமல் போனவர்களை கண்டுபிடித்த காவல் துணை கோட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.
இந்ததகவலை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story