எருமையூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது


எருமையூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2018 4:12 AM IST (Updated: 27 Aug 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

எருமையூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் எருமையூர் ராஜகோபால் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் புனிதன் (வயது 46). இவர் எருமையூர் கூட்ரோடு அருகே 2 நாட்களுக்கு முன்னர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்தை பறித்துச்சென்றனர்.

இதே போல் எருமையூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த அமுல்ராஜ் (27) என்பவரையும் மிரட்டி பணம் கேட்டு தாக்கியுள்ளனர். தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் முருகன் (44). இவர் கிஷ்கிந்தா பகுதியில் உள்ள பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்து செல்வதாக தொடர்ந்து சோமங்கலம் போலீசாருக்கு புகார்கள் வந்தது. புகார்களின் பேரில் சோமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் எருமையூர் கூட்டுச்சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிற்காமல் வேகமாக சென்று விட்டனர். அவர்கள் 5 பேரையும் போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். போலீசாரின் விசாரணையில் அவர்கள் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (28) தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (25) மேற்கு தாம்பரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் ( 21), அதே பகுதியை சேர்ந்த பிரவின்குமார் (19) மற்றும் தர்காஸ் பகுதியை சேர்ந்த தினேஷ் ( 20) என்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் தனியாக நடந்து செல்லும் பொதுமக்ககளிடம் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடித்ததை அவர் கள் ஒப்புக் கொண்டனர். இவர் களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, தடி மற்றும் ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து சோமங்கலம் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து ஸ்ரீபெரும் புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story