விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் மரக்கன்றுகள்


விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:29 AM IST (Updated: 27 Aug 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

பழனி, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வனத்துறை சார்பில் 2 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

பழனி, 


பழனி வனத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பழனியை அடுத்த காரமடை பகுதியில் வையாபுரி குளக்கரையில் மூலிகை பூங்கா அமைக்கும் பணியும் ஒன்றாகும். இந்த பூங்காவில் பல்வேறு மூலிகை செடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. மேலும் வயதானவர்கள் ஓய்வெடுக்க வசதியாக பூங்கா பகுதியில் மேற்கூரையுடன் கூடிய இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் நலனுக்காகவும் வனத்துறை சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தேக்கு, மலைவேம்பு, செம்மரம், இளவம், நாட்டுவேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாடு உயிர் பண்ணை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த திட்டத்தின் கீழ் பழனி மருத்துவ நகர் பகுதியிலும், வரதமாநதி அணை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவை தற்போது நன்கு வளர்ந்துள்ளன. விரைவில் விவசாயிகளுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றனர். 

Next Story