ஆசிரியரை தாக்கி நகை-பணம் பறித்த வாலிபர் கைது


ஆசிரியரை தாக்கி நகை-பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2018 3:15 AM IST (Updated: 27 Aug 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் முகநூல் மூலம் பெண் ஆசை காட்டி ஆசிரியரை வரவழைத்து தாக்கி நகை-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

நெல்லை, 

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை சேர்ந்த ராசு மகன் பிரேம்குமார்(வயது25). இவர் நெல்லை பேட்டையில் தங்கி இருந்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய முகநூலில் ஒரு பெண் பெயரில் இருந்த ஒரு நபர் நண்பரானார். அதில் அவர் அடிக்கடி இவருக்கு குறுஞ்செய்தி அனுப்புவார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஆசிரியரின் முகநூலுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் தான் ஒரு தோட்டத்தில் தனியாக இருப்பதாகவும் நீங்கள் வந்தால் நாம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை நம்பி பிரேம்குமார் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் அருகே உள்ள மேம்பாலம் அருகே சென்றார். அப்போது அங்கு இருந்த ஒரு கும்பல் இவரை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டியும், அவரை தாக்கியும் அவர் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தையும் ரூ10 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம்.கார்டையும் பறித்து சென்றனர். அதில் இருந்த ரகசிய எண்ணை வைத்து அந்த ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அதில் ரூ.5 ஆயிரம் பணத்தையும் அவர்கள் எடுத்து கொண்டனர்.

இது குறித்து பிரேம்குமார் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராமையா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், திம்மராஜபுரத்தை சேர்ந்த முத்துகுட்டி(23), சூரியா(25), சாந்திநகரை சேர்ந்த ஸ்ரீராம்(25) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. முத்துக்குட்டியை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதேபோல் இந்த கும்பல், பலரை ஏமாற்றி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது. 

Next Story