வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க ‘வைபை’


வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க ‘வைபை’
x
தினத்தந்தி 27 Aug 2018 9:30 AM IST (Updated: 27 Aug 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

எந்த நேரம் எங்கே என்ன நடக்கும், யாருக்கும் தெரியாது.

உலக மக்கள் அனைவரும் உயிரைக் கையில்தான் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டிய அளவுக்கு இன்றைக்கு பயங்கரவாதிகள் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

தலீபான்கள், ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி வலை சமூகம் என பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் உலகமெங்கும் கால் பதித்துவிட்டன.

காரணமே இன்றி அப்பாவி மக்களை கொன்று குவிக்க வேண்டும், பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த பயங்கரவாதிகள், டிபன்பாக்ஸ் குண்டு, பீப்பாய் குண்டு, கொத்து குண்டு, பைப் குண்டு, பெட்ரோல் குண்டு, மோட்டார் சைக்கிள் குண்டு, கார் குண்டு, குக்கர் குண்டு, சூட்கேஸ் குண்டு என எந்த வடிவத்தில் எந்த வெடிகுண்டை எங்கே வைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

இன்றைக்கு உலகின் முன் உள்ள மிகப்பெரிய சவால், இந்த பயங்கரவாதம்தான். இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத்தான் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா பல லட்சம் கோடி டாலர்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் ஜி.டி.டி. என்ற பெயரில் உலகளாவிய பயங்கரவாத புள்ளிவிவர மையம் என்ற ஒன்று, பயங்கரவாத சம்பவங்களை பதிவு செய்து, புள்ளி விவரங்களை தொகுப்பதற்கென்றே செயல்படுகிறது என்றால் பயங்கரவாதம் எந்தளவுக்கு தீவிரமாகி வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

1970-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை உலகமெங்கும் ஏறத்தாழ 1 லட்சத்து 80 ஆயிரம் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருப்பதாக இந்த உலகளாவிய பயங்கரவாத புள்ளி விவர மையம் பதிவு செய்து வைத்து இருக்கிறது. இவற்றில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் மட்டுமே 88 ஆயிரம் அரங்கேறி இருக்கின்றன.

உலகின் ஏதேனும் ஒரு நாட்டில், ஒரு நகரத்தில் குண்டுவெடிப்பு நிகழாத நாட்களோ, உயிர்ப்பலி ஏற்படாத நாட்களோ இல்லை.

அண்மைக்காலமாக பொதுக்கூட்டங்களில், பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம், தேவாலயம், மசூதி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சந்தைகள் என மக்கள் கூடுகிற பல இடங்களிலும் நடந்து வருகிற குண்டுவெடிப்புகள் பதற வைப்பதாக அமைந்து இருக்கின்றன.

விமான நிலையங்களில், பஸ் நிலையங்களில், ரெயில் நிலையங்களில், பொது விழாக்களில் குண்டு வெடிப்புகளை தவிர்ப்பதற்கு சோதனை என்ற பெயரில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத்தான் செய்கிறார்கள். இதனால் அப்பாவி பொதுமக்கள் சிரமத்துக்கும், எரிச்சலுக்கும் ஆளாகி வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.

குறிப்பாக பொதுமக்களின் சூட்கேஸ், கைப்பை உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் ஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றபோது தனி மனித அந்தரங்கத்துக்கு, சுதந்திரத்துக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விடுகிறது. விலை மதிப்பில்லாத நேரம் வீணாகிறது. நமது பெட்டியில் அல்லது பையில் என்ன இருக்கிறது என்பதை போலீசார் பரிசோதிக்கிறபோது, நமக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

இப்படிப்பட்ட ஆத்திரத்துக்கு ‘குட்பை’ சொல்லி விட்டு இத்தகைய வெடிகுண்டு சோதனைகளை ஓசைப்படாமல் நடத்துவதற்குத்தான் இப்போது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தின் நியூபிரன்ஸ்விக் நகரில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் வின்லேப் அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

இன்றைக்கு பஸ் நிலையங்களில், ரெயில் நிலையங்களில், கல்லூரிகளில், இன்ன பிற பொது இடங்களில் இலவசமாக கிடைக்கிற வைபை என்னும் கம்பியில்லா இணையதள வசதியை பயன்படுத்தி வெடிகுண்டுகளை, பயங்கரவாத செயல்களில் பயன்படுத்தப்படுகிற ஆயுதங்களை, திரவங்களை கண்டுபிடித்து விடலாம் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

வைபையை வைத்துக்கொண்டு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், கூகுள் என போகலாமே தவிர வெடிகுண்டுகளை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது அல்லவா?

எந்த இடத்திலும் யாரேனும் பை, பெட்டி என எதில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், கத்திகள், பேட்டரிகள், திரவங்கள் வைத்திருந்தாலும் வைபையில் பயன்படுத்தப்படுகிற கம்பியில்லா சமிக்ஞைகளை பயன்படுத்தி அவற்றை கண்டுபிடித்து விடலாம்.

சம்பந்தப்பட்ட நபரிடம் போய் உங்கள் பையை திறந்து காட்டுங்கள், உங்கள் பெட்டியை திறந்து காட்டுங்கள் என்று சொல்லத் தேவையில்லை. அவர்களுக்கு தெரியாமலேயே இதை கண்டுபிடித்து விடலாம். அதன்பிறகு அவரை மடக்கி சோதனை போட்டு அவற்றை கண்டுபிடித்து அழித்துவிடலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

2 அல்லது 3 ஆன்டெனாக்களைக் கொண்ட ஒரு கம்பியில்லா சாதனத்தை வைபை தொலை வசதியுடன் இணைத்து விட்டால் போதும்.

இந்த கம்பியில்லா சாதனத்தில் இருந்து வெளிப்படுகிற சமிக்ஞைகள் (சிக்னல்), ஒருவருடைய உடைமைகளை ஊடுருவிச்சென்று விட்டு, திரும்பி வரும். அவற்றை பகுப்பாய்வு செய்தால் போதும். அவற்றில் குண்டு இருக்கிறதா, துப்பாக்கி இருக்கிறதா, ஆசிட் இருக்கிறதா என தெரிய வந்து விடும்.

வைபை துணையுடன் கூடிய இந்த சாதனத்தை சோதனை ரீதியில் பயன்படுத்தி பார்த்தபோது முதுகில் அணிந்து கொள்கிற பைகளுக்குள் வெடிகுண்டு போன்றவை இருந்தால் 95 சதவீதம் துல்லியமாக கண்டுபிடித்து விட முடிந்து இருக்கிறது.

இந்த கண்டுபிடிப்பை செய்த விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்று உள்ள விஞ்ஞானி யிங்யிங் சென் இதுபற்றி கூறும்போது, “இந்த அமைப்பு இன்றைக்கு அவசியமாகி இருக்கிறது. விமான நிலையங்கள் போன்றவற்றில் வெடிகுண்டு சோதனைகளை நடத்துவதற்கான அமைப்புகளை நிறுவுவது என்பது மிக செலவு பிடிக்கிற அம்சம். இந்த பணியை செய்து முடிப்பதற்கு அதிகாரிகளை அமர்த்த வேண்டியதும் இருக்கிறது. இதையெல்லாம் குறைப்பதற்கு ஒரு அமைப்பை உருவாக்க விரும்பித்தான் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இப்போது வைபை துணையுடன் நிறுவுகிற வயர்லஸ் அமைப்பை கண்டுபிடித்து இருக்கிறோம். இதன்மூலம் சோதனை என்ற பெயரில் தனி நபர்களின் அந்தரங்கம் பாதிக்காது” என்கிறார்.

இந்த சோதனை முறை எல்லா இடங்களிலும் நடைமுறைக்கு வந்துவிட்டால் போதும். பயங்கரவாத தாக்குதல்களையே தவிர்த்து விட முடியும் என்ற நம்பிக்கை வெளிச்சம் உருவாகி இருக்கிறது.

-இலஞ்சியன் 

Next Story