விருதுநகரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
விருதுநகரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார்.
சிவகாசி,
தனியார் நிறுவனமான பி.ஏ.சி.எல். வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை திரும்ப கொடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சுரேஷ் தலைமை தாங்கினார். மாரிமுருகன் வரவேற்று பேசினார். பெருமாள் முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தை கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, சிவகாசி தாலுகா செயலாளர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆர்.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
மத்திய, மாநில அரசு அனுமதி பெற்ற பல தனியார் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளிட்டு ஏழை மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இந்த பணியை செய்ய முகவர்கள் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு நியமிக்கப்படும் முகவர்கள் பல கோடி ரூபாய்களை திரட்டி தனியார் நிதிநிறுவனங்களுக்கு கொடுக்கிறார்கள்.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த பி.ஏ.சி.எல். தனியார் நிதி நிறுவனம் நாடு முழுவதும் 7 கோடி பேரிடம் ரூ.48 ஆயிரம் கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முகவர்களாக 1 கோடி பேர் இருந்துள்ளனர். ஆனால் இதுவரை பயனாளிகளுக்கு அந்த பணம் திருப்பி செலுத்தப்படவில்லை. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு வந்தது. அப்போது 2014–ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் 6 மாதத்துக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.
இந்த பிரச்சினையால் முகவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் முகவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் பெரிய போராட்டத்தை நாங்கள் நடத்துவோம்.
மேட்டூர் அணை நிரம்பி 120 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையும் உள்ளது. இங்குள்ள நீர்நிலைகளை தூர்வாராமல் இருந்ததால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. காவிரி–வைகை–குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்போது உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நிதி உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மழையும் இல்லை. ஆற்று பாசனம், கிணற்று பாசனம் இல்லை. இதனால் விவசாயம் இல்லாமல் போனது. இங்குள்ள தொழிலான பட்டாசுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. அதனால் இந்த மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டு மாற்றாட்சியை ஏற்படுத்த வேண்டும். கேரள வெள்ளப்பாதிப்புக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுடன் மேலும் 18 தொகுதிகளுக்கும் சேர்ந்து தேர்தல் வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.