மு.க.அழகிரி நடத்தும் பேரணி தொடர்பாக அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதிய 6 தொழிலாளர்கள் கைது


மு.க.அழகிரி நடத்தும் பேரணி தொடர்பாக அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதிய 6 தொழிலாளர்கள் கைது
x
தினத்தந்தி 28 Aug 2018 3:45 AM IST (Updated: 27 Aug 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மு.க.அழகிரி நடத்தும் பேரணி தொடர்பாக திருச்சியில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதிய 6 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையொட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5–ந்தேதி சென்னையில் நினைவு அஞ்சலி பேரணி நடத்தப்படும் என்று மு.க.அழகிரி அறிவித்துள்ளார். மேலும் பேரணி தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார். திருச்சியில் மு.க.அழகிரி ஆதரவாளர்களும் பேரணிக்கு செல்வது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். ஊர்வலம் தொடர்பாக ஆங்காங்கே சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் சுவர் விளம்பரங்களும் எழுதப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாலக்கரை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பால சுவரில் மு.க.அழகிரி நடத்தும் பேரணி தொடர்பாக விளம்பரம் எழுதப்பட்டிருந்தது.


இந்த சுவர் விளம்பரம் அனுமதியின்றி எழுதப்பட்டுள்ளதாக பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அதனை எழுதும் பணியில் ஈடுபட்ட திருச்சி தெற்கு தாராநல்லூரை சேர்ந்த ஜெயராஜ் (வயது38), ராஜா (37), காட்டூர் சரவணன் (45), தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ஜெயராஜ் (36), காந்திமார்க்கெட் ரகுராம் (35), குவளக்குடி அன்பழகன் (49) ஆகிய 6 பேர் மீது சப்–இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தார். பின்னர் 6 பேரையும் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். கைதானவர்கள் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இல்லை எனவும், 6 பேரும் சுவர் விளம்பரம் எழுதும் தொழிலாளர்கள் என்றும் போலீசார் கூறினர். மேலும் அந்த சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

Next Story