தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி தொடக்கம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி தொடக்கம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 28 Aug 2018 4:45 AM IST (Updated: 28 Aug 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி தொடங்கப்படுவதாக புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் ரூ.1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தொற்று நோய் இல்லாத நிலையை தமிழக அரசு உருவாக்கியது. அதேபோல கேரள மாநிலத்திலும் தொற்று நோய் இல்லாத நிலையை உருவாக்க தமிழக அரசின் சார்பில் 2-வது கட்டமாக ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான குளோரின் மாத்திரைகள், பாம்பு விஷ முறிவு மருந்துகள், இன்சுலின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் 3-வது கட்டமாக 500 டன் பிளச்சிங் பவுடர் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொற்றா நோய் பரவாமல் தடுப்பதற்காக கேரளாவிற்கு தமிழகத்தை சேர்ந்த 10 பூச்சியியல் வல்லுனர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் தமிழக மருத்துவ குழுவின் மூலம் 322 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 20 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்று விக்டோரியா மாகாண சுகாதாரத்துறை அமைச்சருடன் புரிந்துணர்வு அறிக்கையில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. உலகின் தலைசிறந்த விபத்துக்காய சிகிச்சை அமைப்பின் முறையை பின்பற்றும் வகையில் அவசர சிகிச்சை திட்டம் குறித்து தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 75 இடங்கள் கண்டறியப்பட்டு மேலைநாடுகளுக்கு இணையான விபத்து சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு, அதில் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ வசதிகளும் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் விரைவில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஏர் ஆம்புலன்ஸ் வசதி தொடங்கப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளிலும் மனநலத்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில் தனியாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story