வியாசர்பாடியில் வீட்டின் பூட்டை திறந்து 30 பவுன் நகை, பணம் திருட்டு


வியாசர்பாடியில் வீட்டின் பூட்டை திறந்து 30 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 28 Aug 2018 3:00 AM IST (Updated: 28 Aug 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில், வீட்டின் வெளியே மின்சார பெட்டியில் வைத்திருந்த சாவியை எடுத்து பூட்டை திறந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணகி (வயது 60). இவரது கணவர் மனோகரன் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகன் சென்னையில் தனியாக வசிக்கிறார். இவருடன், மற்றொரு மகன் அப்புனு வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அப்புனு வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் கண்ணகி வீட்டை குடிநீர் வாரியத்துக்கு வரி செலுத்துவதற்காக வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வீட்டின் வெளியே உள்ள மின்சார பெட்டியில் வைத்துவிட்டு சென்றார். பின்னர் வரி செலுத்திவிட்டு வீட்டுக்கு வந்தார். மின்சார பெட்டியில் வைத்து சென்ற சாவியை எடுத்து வீட்டின் உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் கலைந்து கிடந்தது.

நகை, பணம் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேடி பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணகி எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வெளியே உள்ள மின்சார பெட்டியில் வைத்து செல்வதை அறிந்த மர்மநபர்கள், சாவியை எடுத்து வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story