பிரபல டாக்டர் கொலை வழக்கில் ஐகோர்ட்டு வக்கீல் சரண் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஐகோர்ட்டு வக்கீல் சரணடைந்தார்.
சென்னை,
சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கூலிப்படையினரால் கடந்த 2013-ம் ஆண்டு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், ஐகோர்ட்டு வக்கீல்கள் பேசில், வில்லியம், அரசு மருத்துவர் ஜேம்ஸ்சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை 9 அரசு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கின் முக்கிய சாட்சிகளை வக்கீல் வில்லியம் மிரட்டி வருகிறார் என்றும், எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அபிராமபுரம் போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வில்லியமிற்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்தது. இதை எதிர்த்து அவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் வில்லியம் நேற்று சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் மீதான வழக்கு விவரங்களை சிறப்பு அரசு வக்கீல் விஜயராஜ், நீதிபதியிடம் எடுத்துக் கூறினார். இதைத்தொடர்ந்து, அவரை வருகிற 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story