துப்பாக்கி சூடு சம்பவம்: தூத்துக்குடியில் ஒருநபர் ஆணையம் 3-ம் கட்டமாக விசாரணை
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் 3-ம் கட்டமாக விசாரணையை தொடங்கியது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 2-வது கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது 3-ம் கட்டமாக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் நேற்று விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணைக்காக, துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் நேற்று 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த தபால் தந்தி காலனி 11-வது தெருவை சேர்ந்த பரமசிவன் என்பவர் நடக்க முடியாததால், ஆம்புலன்ஸ் மூலம் விசாரணை ஆணையத்துக்கு வந்து வாக்குமூலம் அளித்தார்.
இதேபோன்று முன்னாள் கவுன்சிலர் சந்திரபோஸ், பாலகுமார், ஆனந்தகண்ணன், இன்பென்டா ஆகியோரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
சம்மன் அனுப்பப்பட்ட முருகேசுவரி, பாலையா ஆகியோர் ஆஜர் ஆகவில்லை. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) வரை விசாரணை நடக்கிறது.
Related Tags :
Next Story