பத்ரா ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு சி.டி.ரவி உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்


பத்ரா ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு சி.டி.ரவி உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்
x
தினத்தந்தி 28 Aug 2018 5:00 AM IST (Updated: 28 Aug 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

பத்ரா ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது. சி.டி.ரவி உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

சிக்கமகளூரு,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து வாஜ்பாயின் அஸ்தியை இந்தியா முழுவதும் உள்ள ஆறுகளில் கரைக்க மத்திய பா.ஜனதா அரசு முடிவு செய்தது. அதன்படி கர்நாடகத்தில் 8 ஆறுகளில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த விழாவில் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலந்துகொண்டு, வாஜ்பாய் அஸ்தி கலசங்களை பெற்றுக் கொண்டு பெங்களூருவுக்கு வந்தார். கர்நாடகத்தில் முதல் கலசம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஓடும் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் ஓடும் பத்ரா ஆற்றில் 27-ந்தேதி (அதாவது, நேற்று) கரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை வாஜ்பாயின் அஸ்தி சிக்கமகளூருவுக்கு வந்தது. சிக்கமகளூருவில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டது. அதற்கு பா.ஜனதாவின் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அஸ்தி கலசம், எம்.ஜி. ரோடு, ஐ.ஜி.ரோடு, மூடிகெரே, பாலேஒன்னூர் வழியாக காண்டியா பகுதியில் ஓடும் பத்ரா ஆற்றுக்கு கொண்டு சொல்லப்பட்டது. அங்கு வைத்து வாஜ்பாயின் அஸ்தி கலசத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த பூஜையில், எம்.எல்.ஏ.க்கள் சி.டி.ரவி (சிக்கமகளூரு), குமாரசாமி (மூடிகெரே), சுரேஷ் (தரிகெரே), பெல்லி பிரகாஷ் (கடூர்) ஆகியோர் உள்பட பா.ஜனதாவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து சி.டி.ரவி உள்பட 4 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து பத்ரா ஆற்றில் வாஜ்பாயின் அஸ்தியை கரைத்தனர்.

Next Story