அண்ணாநகரில் பயங்கரம்: குடும்பத்தகராறில் கழுத்தை அறுத்து மனைவி கொலை மாநகராட்சி தொழிலாளி கைது
சென்னை அண்ணாநகரில் குடும்பத்தகராறில் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த மாநகராட்சி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் கிழக்கு நியூ காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). மாநகராட்சியில் கொசுமருந்து அடிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அம்மு (25). இவர்களது மகன் மோகன்கிருஷ்ணன், அயனாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர், தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். மேலும் சந்தேகத்தின்பேரில் மனைவி அம்முவை, சீனிவாசன் அடித்து உதைத்து வந்ததாக தெரிகிறது.
கழுத்தை அறுத்து கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல குடிபோதையில் வந்த சீனிவாசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், அம்முவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். தப்பி செல்வதற்கு முன்பாக மனைவியை கொலை செய்தது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சீனிவாசன் தகவல் கொடுத்து உள்ளார்.
இதனையடுத்து துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் டி.பி.சத்திரம் போலீசார் விரைந்து சென்று அம்முவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த சீனிவாசன் நேற்று கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story