கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
x
தினத்தந்தி 28 Aug 2018 3:15 AM IST (Updated: 28 Aug 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலைகள் அமைப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கண்டித்து இந்து முன்னணியினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நெல்லை, 


விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவார்கள். பின்னர் குறிப்பிட்ட நாளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். இந்த ஆண்டு சிலைகளை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

இந்தநிலையில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், பொதுச் செயலாளர் அரசு ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் இந்து முன்னணியினர் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று ஏராளமானோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் கொடிகளை ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், ஒட்டு மொத்தமாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி மறுத்தனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் மனுக்களை சேகரித்து கலெக்டரிடம் வழங்க ஏற்பாடு செய்தனர்.

இதுதொடர்பாக மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு எதிரான கொள்கை கொண்டவர். ஆனால் அவர் முதல்-அமைச்சராக இருந்த போது விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி வழங்கி விடுவார். அதே போல் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனால் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால் ஜெயலலிதா வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி அரசு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு 24 கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கிராம பகுதியில் விநாயகர் சிலை வைக்கும் பக்தர்கள் தீயணைப்பு துறை, உள்ளாட்சி துறை என பல்வேறு அரசு துறைகளிடம் அனுமதி பெற்று சிலையை வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இது ஒட்டுமொத்த இந்து சமுதாய மத உணர்வை தூண்டி விடுவது போல் உள்ளது. எனவே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி, விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திங்கட்கிழமை தோறும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் ஒட்டுமொத்தமாக மனு கொடுக்க வரும் பொது மக்களை மொத்தமாக உள்ளே செல்ல அனுமதிக்காமல், 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி கொடுப்பார்கள்.

ஆனால் நேற்று இந்து முன்னணியினர் மனு கொடுப்பதற்காக தனித்தனி மனுவுடன் ஒவ்வொருவராக உள்ளே வந்தனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. 

Next Story