பாளையங்கோட்டை சிறையில் கைதி சாவு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாளையங்கோட்டை சிறையில் கைதி இறந்தது தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை சிறையில் கைதி இறந்தது தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் மந்தை மைதானம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். டீக்கடை நடத்தி வந்தார். இவர் ஒரு வழக்கில் சிவகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் திடீரென்று இறந்து விட்டார்.
இந்த நிலையில் கணேசனின் மனைவி விஜயலட்சுமி, மகன்கள் தங்கமலை, அஜீத் மற்றும் மகள் வீரலட்சுமி மற்றும் குடும்பத்தினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
வெங்காய பயிரை சேதப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் கணேசன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 18-ந் தேதி காலை போலீசார் கணேசனை மிரட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தாமல் கணேசனை மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தி உள்ளனர். இதனால் சிறையில் அவர் இறந்து உள்ளார். இதற்கு காரணமான போலீசார் மற்றும் சிறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story