ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் கைது


ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2018 3:15 AM IST (Updated: 28 Aug 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர்,

சென்னை தாம்பரம் அருகில் உள்ள கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் ரத்தினம் (வயது 45). இவர் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார்.

மரம் அறுவை தொழிலகம் அமைக்க மரம் அறுவை இயந்திரம் வாங்குவதற்காக காஞ்சீபுரம் மாவட்ட தொழில் மையத்தில் கடன் வாங்க சுனில் குமார் முடிவு செய்தார். இதற்காக மாவட்ட தொழில் மையத்தில் உள்ள சிறு, குறு தொழில் உதவி மைய உதவி இயக்குனர் அருள் (44) என்பவரிடம் கடனுக்கு விண்ணப்பித்தார்.

ரூ.33 ஆயிரம் லஞ்சம்

சுனில் குமார் இதற்காக 3 மாதங்களாக அலைந்து திரிந்த நிலையில் அவருக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் வழங்க மாவட்ட தொழில் மையம் கடந்த வாரம் முடிவு செய்தது. இந்த தொகையை வழங்க வேண்டுமானால் ரூ.33 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென சுனில் குமாரிடம் மாவட்ட சிறு, குறு தொழில் உதவி இயக்குனர் அருள் கூறினார்

இது குறித்து ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சுனில் குமார் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைபடி சுனில் குமார், அருள் லஞ்சமாக கேட்ட ரூ.33 ஆயிரத்தை தருவதாக அவரிடம் ஒப்புதல் அளித்தார்.

கையும், களவுமாக...

அதன்படி அம்பத்தூர் வெங்கடபுரத்தில் உள்ள அருள் வீட்டிற்கு சுனில் குமார் நேற்று காலை சென்றார். அப்போது அவர் தான் வீட்டிற்கு வெளியே பணத்துடன் காத்திருப்பதாக அருளிடம் கூறினார்.

இதனையடுத்து அருள் வெளியே வந்து, சுனில் குமாரிடம் இருந்து பணத்தை பெற்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் வந்த போலீசார் அருளை கையும் களவுமாக பிடித்தனர்.

அதன் பின்னர் அருளை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story