சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3-ந்தேதி பா.ம.க. போராட்டம்
மேட்டூர் அணையின் உபரிநீரை மாவட்டம் முழுவதும் பயன்படுத்த கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
மேட்டூர்,
மேட்டூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடவடிக்கை எடுத்து உள்ளார். அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், சிறப்பு மாவட்ட செயலாளர் வெடிக்காரனூர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் மதியழகன், மேட்டூர் நகர செயலாளர் நைனாசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு பிறகு ஜி.கே.மணி மேட்டூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீருடன் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் சேர்ந்ததால் காவிரி கொள்ளிடத்தில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் பாய்ந்து ஓடி கடலில் வீணாக கலந்தது.
கொள்ளிடத்தில் 2 கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். முகாம் அமைக்கப்பட்டு இருந்த கிராமத்திற்கு தண்ணீர் வசதி இல்லை. பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி பாய்ந்தோடி வரும் தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேட்டூர் அணை நிரம்பும் நேரங்களில் உபரிநீர் வீணாக கலப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் உள்ள வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு, சரபங்காநதி ஆகிய நதிகளை இணைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 9 அணைகள் புதிதாக கட்டப்பட்டது. அதற்கு பின் எந்த அணையும் கட்டப்படவில்லை. மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி 3-ந்தேதி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் கோரிக்கை விளக்க போராட்டம் நடத்தப்படும்.
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கரூர், கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்வாய்களில் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி 4-ந்தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பா.ம.க. சார்பில் கோரிக்கை விளக்க போராட்டம் நடத்தப்படும். காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆகிய 3 ஆறுகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, வைப்பாறு இணைப்பு திட்டத்தையும் அரசு செயல் படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story