கூடுதல் பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டையில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பாண்டூர், நெய்வனை, வடகுரும்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் விருத்தாசலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருவார்கள். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சரிவர அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். விருத்தாசலத்துக்கு காலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மாணவர்கள், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை கூடுதல் பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் விருத்தாசலத்துக்கு செல்ல கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பஸ்கள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே உளுந்தூர்பேட்டை-சென்னை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூடுதல் பஸ்களை இயக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், மாணவர்களிடம் உங்களது கோரிக்கைகள் குறித்து மனுவாக எழுதி கொடுங்கள், அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதற்கு மாணவர்கள் பலமுறை நாங்கள் மனு கொடுத்தும், இதுவரை போக்குவரத்துதுறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் கல்லூரிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார், போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி பஸ் நிலையத்தில் நின்றிருந்த பஸ்சை விருத்தாசலத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மாணவர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story