குடிநீர் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் 80 ரூபாயாக இருந்த குடிநீர் கட்டணத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.200 ஆக பேரூராட்சி நிர்வாகம் உயர்த்தியது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று பட்டணம் பேரூராட்சியைச் சேர்ந்த திரளான ஆண்களும், பெண்களும், உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்ப பெறக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், 4, 5, 13, 14 உள்ளிட்ட வார்டுகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சதீஸ் மற்றும் ராசிபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story