விநாயகர் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


விநாயகர் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

திருச்சி,

இந்து முன்னணி மாவட்ட தலைவர் மணி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சுரேஷ்பாபு, ஜீவா, ஆறுமுகம், கோட்ட பொறுப்பாளர் ரவிக்குமார் மற்றும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், மணப்பாறை, துவரங்குறிச்சி, முத்தாலம்பட்டி, பாரப்பட்டி, அலங்கப்பட்டி உள்ளிட்ட 18 பட்டிகளை சேர்ந்தவர்கள் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:–

விநாயகர் சிலைகள் வைக்க, இந்த ஆண்டு ஒரு அரசாணை மூலம் சாதாரண மக்களும் கடைபிடிக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இது இந்துக்களின் மதவழிபாட்டு உரிமையை மறுப்பதுபோல் உள்ளது. காவல்துறையினர் தற்போது பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் கோட்டாட்சியரிடம்தான் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே, விநாகர் சதுர்த்தி விழாவை சாதாரண மக்களும் சுலபமாக கொண்டாடும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி மாவட்ட டிஸ்டிரிபியூட்டர்ஸ் அசோசியேசன் தலைவர் ராஜசேகரன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில், ‘திருச்சி மாநகர பகுதிகளில் உணவு பொருட்கள் வணிகம் செய்யும் வியாபாரிகள் 500–க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி., சாலை வரி, வருமான வரி உள்ளிட்ட அனைத்தும் முறையாக செலுத்தி வருகிறோம். மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் குறிப்பிட்ட இடங்களில் சுங்கம் வசூலிக்க ஒப்பந்தாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் ஒப்பந்ததாரர்கள் என்ற போர்வையில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தாண்டி அடியாட்களை கொண்டு வணிகர்களை மிரட்டியும், வாகனங்களை பூட்டியும் அராஜக வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களான பெரிய கம்மாளத்தெரு, உறையூர் சாலைரோடு, தில்லைநகர், பெரிய கடைவீதி, ஸ்ரீரங்கம், துவாக்குடி, திருவெறும்பூர், சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் இந்த வசூல் வேட்டை நடக்கிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த அராஜக வசூல் வேட்டையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘, என்று கூறப்பட்டிருந்தது.

தனியார் நிறுவனங்களில் கடந்த 14 ஆண்டுக்கு முன்பாக செவிலியர் உதவியாளர் பயிற்சி பெற்ற திருமங்கலத்தை சேர்ந்த ஜெனட் சர்மிளா, ஸ்ரீபிரியா, கவுசல்யா, கவிதா உள்ளிட்ட 20 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக அங்கீகாரம் பெறாத தனியார் வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் கடந்த 2004–ம் ஆண்டு செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்தோம். இதுவரையில் எங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை. எனவே ஏழை, எளிய மாணவ–மாணவிகள் வாழ்க்கைத்தரம் உயர எங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில் அமைந்துள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை சரியாக பராமரிக்காமல், சாக்கடை கழிவு நீரை கோரையாற்றில் கலக்க செய்வதை தடுத்து நிறுத்தி சுகாதாரத்தை காக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.


Next Story