கொலை செய்யப்பட்டவரின் உடல் தண்டவாளத்தில் வீச்சு போலீசார் விசாரணை
மலாடு ரெயில் நிலைய தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடல் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை,
மும்பை மலாடு ரெயில்நிலையம் 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 25 அடி தூரத்தில் தண்டவாளத்தில் ஆண் உடல் ஒன்று கிடப்பதாக நேற்று முன்தினம் மதியம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்டவரின் கழுத்தில் ஆழமான வெட்டு காயம் இருந்தது. அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் கொலையாளிகள் அவரது வாயில் துணியை திணித்து வைத்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
யாரோ மர்ம ஆசாமிகள் அவரை கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிணமாக மீட்கப்பட்டவர் கருப்பு நிற பேண்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து இருந்தார். அவருக்கு 40 முதல் 45 வயது இருக்கலாம். அவர் யார்? என்று உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.
கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தால் மலாடு ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story