நகராட்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


நகராட்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:20 AM IST (Updated: 28 Aug 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் உழவர் சந்தையில் குப்பைகளை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம், 


கம்பத்தில் கடந்த 2000-ம் ஆண்டு உழவர் சந்தை தொடங்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதற்காக அங்கு 150 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர் சந்தையில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 முதல் 60 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் மற்றும் குப்பைகள் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள நகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டு வந்தது. இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றி குப்பைக்கிடங்கில் கொட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள, குப்பைத் தொட்டி திடீரென அகற்றப்பட்டன.

குப்பைத்தொட்டி இல்லாததால் உழவர் சந்தையின் முன்பு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் கழிவுகள் அகற்றப்படாமல் மலைபோல் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், நேற்று உழவர் சந்தையில் குப்பைகளை அகற்றக்கோரியும், குப்பைத்தொட்டியை வைக்கக்கோரியும் உழவர் சந்தையில் இருந்து ஊர்வலமாக சென்று கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் தெற்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் 4 பேர் மட்டுமே கமிஷனரை சந்திக்க செல்ல வேண்டும் என்று கூறினர். ஆனால் விவசாயிகள் அனைவரும் கமிஷனரை சந்திக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து 10 பேர் மட்டும் கமிஷனர் சங்கரனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர், உழவர் சந்தையில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். இதையடுத்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story