மும்பையில் ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது மாநகராட்சி அதிகாரி தகவல்


மும்பையில் ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது மாநகராட்சி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:23 AM IST (Updated: 28 Aug 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் அடுத்த ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என மாநகராட்சி அதிகாரி கூறியுள்ளார்.

மும்பை,

மும்பைக்கு தினமும் 3 ஆயிரத்து 750 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த தண்ணீர் மோடக் சாகர், தன்சா, விகார், துல்சி, மேல் வைத்தர்னா, பட்சா, மத்திய வைத்தர்னா ஆகிய ஏரிகளில் இருந்து மும்பைக்கு கிடைக்கிறது. கடந்த 3 மாதங்களாக மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. ஜூலை மாதம் துல்சி, மோடக் சாகர், விகார் ஆகிய ஏரிகள் நிரம்பின.

இந்தநிலையில் நேற்று மும்பை மாநகராட்சி ஏரிகளில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் மொத்தம் 13 லட்சத்து 73 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 94.89 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இந்த ஆண்டு ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் ஏரிகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். தற்போது உள்ள நிலையில் அடுத்த ஒரு ஆண்டுக்கு மும்பையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. எனினும் அக்டோபர் 1-ந் தேதி ஏரிகளில் உள்ள நீர் இருப்பை வைத்தே உறுதியாக கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story