பழனி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை


பழனி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 28 Aug 2018 4:42 AM IST (Updated: 28 Aug 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

பழனி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மாவட்டத்தில் முதல் முறையாக இங்கு செய்யப்பட்டுள்ளது.

பழனி, 


பழனியை அடுத்த போடுவார்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 47). கடந்த சில ஆண்டுகளாக முழங்கால் வலியால் காளியம்மாள் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு டாக்டர்கள் சதீஸ்பாபு, முருகேஸ்குமார் ஆகியோர் பரிசோதனை செய்தனர். அப்போது காளியம்மாளின் முழங்கால் மூட்டு எலும்புகளில் தேய்மானம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயசேகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

விவசாய குடும்பத்தை சேர்ந்த காளியம்மாளுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூட்டு போன்ற அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருடைய மூட்டுவலி பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார். முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இது போன்ற சிகிச்சை மேற்கொள்ள லட்சக்கணக்கில் பணம் செலவாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக பழனி அரசு மருத்துவமனையில் தான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சாதனை படைத்த அரசு மருத்துவமனை டாக்டர்களை சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மாலதி பிரகாஷ் பாராட்டினார். 

Next Story