வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதந்த 150 கிலோ மீன்கள் அகற்றம்


வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதந்த 150 கிலோ மீன்கள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Aug 2018 5:00 AM IST (Updated: 28 Aug 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை அகழியில் செத்துமிதந்த 150 கிலோ மீன்கள் அகற்றப்பட்டது.

வேலூர், 

வேலூர் கோட்டை அகழியில் நேற்று முன்தினம் காலையில் மீன்கள் செத்து மிதந்தன. இதை கோட்டையில் நடைபயிற்சிக்கு சென்றவர்களும், பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோட்டையில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். மேலும் மீன்வளத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் கோட்டை அகழிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது செத்து மிதந்து கொண்டிருந்த மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரகுநாதன் உத்தரவின்பேரில், ஊழியர்கள் கோட்டை அகழிக்கு சென்று செத்துமிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மூங்கில் கூடைகளை கொண்டும், கையாலும் மீன்களை அகற்றி கோட்டை அகழியின் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

கடந்த 25-ந் தேதி பெய்த மழையால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு மீன்கள் இறந்திருப்பதாகவும், செத்துமிதந்த 150 கிலோ மீன்கள் அகற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story