வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு அதிகாரிகள் அகற்றினர். அப்போது அதிகாரிகளிடம், வியாபாரிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மக்கள் மட்டுமின்றி ஆந்திர மாநில மக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகிலும், மருத்துவமனை சுற்றுச்சுவரையொட்டியும் பலர் சாலையோரம் ஆக்கிரமிப்புச் செய்து தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து மருத்துவமனையின் நுழைவுவாயில் வரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நோயாளிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள், நோயாளிகள், மருத்துவமனை நிர்வாகிகள் தரப்பில், மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே, பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகமும் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற பலமுறை முயற்சி செய்தது. ஆனால் அதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆகையால் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற முடியாத நிலை இருந்து வந்தது.
இந்தநிலையில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற கலெக்டர் ராமன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புக் கடைகளை வியாபாரிகள் தானாகவே முன்வந்து தங்களின் கடைகளை அகற்றிக் கொள்ள வேண்டும் எனப் பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், வியாபாரிகளுக்கு நோட்டீசு வழங்கினார். எனினும், வியாபாரிகள் தங்களின் கடைகளை அகற்றவில்லை.
இதையடுத்து நேற்று காலை மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன் தலைமையில், வேலூர் தாசில்தார் ரமேஷ், பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், வேலூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனையத்பாஷா மற்றும் போலீசார் மருத்துவமனை பகுதிக்கு வந்து, பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றினர்.
அப்போது அதிகாரிகளிடம், வியாபாரிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து வியாபாரிகளை சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் தங்களின் கடைகளை அகற்றக் கூடாது எனக்கூறி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனுக்களை கொடுத்தனர்.
Related Tags :
Next Story