பாம்பனில் ரூ.70 கோடியில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி இறங்கு தளம்: கலெக்டர் ஆய்வு
பாம்பனில் ரூ.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி இறங்கு தள பணிகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தூண்டில் வளைவு கட்டி தர மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி இறங்கு தள பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று குந்துகால் கடற்கரை பகுதிக்கு கலெக்டர் வீரராகவராவ் வருகை தந்தார். வருகை தந்த கலெக்டர் ஆழ்கடல் மீன்பிடி இறங்கு தளத்தின் வரைபடத்தை ஆய்வு செய்ததுடன் இறங்கு தளத்திற்காக நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது மீன்பிடி இறங்கு தளத்தின் சிறப்பு குறித்து பொறியாளர் சிவகுமார் விளக்கி கூறினார்.
ஆய்வு செய்த கலெக்டரிடம் ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் தேவதாஸ், போஸ், சேசுராஜாஆகியோர் குந்துகால் கடற்கரையில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி இறங்கு தளத்தின் அருகில் அரசு சார்பில் ஐஸ் பிளான்ட் கட்டி தர வேண்டும். தனியார் கம்பெனிகளில் இருந்து அதிக விலைக்கு ஐஸ் கட்டிகள் வாங்கி வரப்படுகிறது. அதுபோல் மீன்பிடி இறங்கு தளத்தின் அருகில் சிங்கிலிதீவு மற்றும் குருசடை தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் தூண்டில் வளைவு கட்டி தர வேண்டும்.
இங்கு தூண்டில் வளைவு இருந்தால் தான் மீன்பிடி இறங்கு தளம் கட்டியதற்கு பயன் இருக்கும். இல்லையெனில் படகை நிறுத்த முடியாத நிலை எற்பட்டு விடும் என்று கோரிக்கை வைத்தனர்.இது குறித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டு கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று மீனவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின் போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழக மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மீன் வளத்துறையின் மூலம் பல்வேறு வசதிகளுடன் ரூ.70 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 18 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி முடியும் பட்சத்தில் இந்த பகுதியில் சுமார் 700 படகுகள் நிறுத்த முடியும். இதே போல் மூக்கையூர் கடற்கரையில் ரூ.113 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதத்திற்குள் இந்த துறைமுக பணிகள் முடிவடையும்.
பிளாஸ்டிக்பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இவற்றை யாரும் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். உடன் வருவாய் கோட்டாட்சியர் சுமன், ஊராட்சியின் உதவி இயக்குனர் செல்லதுரை, மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் மணிகண்டன், கோபிநாத், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணாதுரை, தாசில்தார் சந்திரன், அப்துல்ஜபார் உள்பட பலர் உடனிருந்தனர்.