ஆண்டிப்பட்டி அருகே மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியை விரட்டிப் பிடித்த கலெக்டர்


ஆண்டிப்பட்டி அருகே மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியை விரட்டிப் பிடித்த கலெக்டர்
x
தினத்தந்தி 29 Aug 2018 3:45 AM IST (Updated: 28 Aug 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து கம்பத்திற்கு மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் காரில் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தில் நேற்று நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதியம் அலுவலகத்திற்கு காரில் சென்றார். க.விலக்கு பகுதியில் வந்தபோது காரின் முன்னால் மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

இதைக்கண்ட கலெக்டர் அந்த லாரியை மடக்கி பிடிக்கும்படி டிரைவருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியை சிறிது தூரம் காரில் விரட்டி சென்று மடக்கி பிடித்து, லாரி டிரைவரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார்.

அப்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து கம்பத்திற்கு செல்வதாக கூறினார். தொடர் விசாரணையில் அந்த டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து லாரியை க.விலக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த லாரி க.விலக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு கலெக்டர் சென்றார்.

பிடிபட்ட லாரியில் 34 மாடுகள் இடவசதி இன்றி குறுகிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதைத்தொடர்ந்து மாடுகளை உணவின்றி பயணம் செய்து சித்ரவதை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story