சுயதொழில் தொடங்க வங்கிகள் கடன் வழங்க வேண்டும், கலெக்டர் பேச்சு
பெண்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் டி.ஜி.வினய் பேசினார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வங்கிகள் மூலம் தொழில்முனைவோருக்கு கடன் உதவி வழங்குவது தொடர்பான பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடந்தது. இதனை கலெக்டர் டி.ஜி.வினய் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடைய வேண்டும். இதன் மூலம் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அதிக அளவில் பெண்கள் தான் வேலை செய்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் கிராமங்கள் தோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மேலும் அவர்களை கொண்டு சுயஉதவிக்குழுக்களை உருவாக்கி சுயதொழில் பயிற்சி அளித்து, வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி முன்னேறுவதற்கு, பெண்கள் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கி வங்கி கடன் பெற்று, சுயதொழில் தொடங்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினரில், 80 சதவீதத்தினர் முறையாக வங்கி கடனை திரும்ப செலுத்துகின்றனர். இதேபோல் அனைவரும் முறையாக கடனை திரும்ப செலுத்தி, மீண்டும் கடன்பெற்று பயன்பெறலாம். மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வரும், மாற்றுத்திறனாளிகளில் பலர் வேலைவாய்ப்பு கேட்டு தான் வருகின்றனர்.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வங்கியாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்காக வங்கிகடன் கேட்டு வந்தால், வங்கியாளர்கள் கடன் வழங்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.