பவானி ஆற்றில் நாள்தோறும் ஜோராக நடக்கும் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பவானி ஆற்றில் நாள்தோறும் ஜோராக நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பவானி,
காவிரி மற்றும் பவானி ஆற்றில் கடந்த 9–ந் தேதி முதல் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பி காவிரி ஆற்றில் 2 லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் நீலகிரி மற்றும் கேரளாவில் பலத்த மழை கொட்டியதால், 7 ஆண்டுகளுக்கு பிறகு 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 15 நாட்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ஏற்கனவே மணல் அள்ளப்பட்ட குழிகளில் புதிதாக மணல் அடித்து வரப்பட்டு நிரம்பியுள்ளது. இதேபோல் இருகரை ஓரங்களிலும் மணல்கள் அதிக அளவில் படிந்துள்ளன.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் மர்ம நபர்கள் மீண்டும் மணல் கடத்தலை தொடங்கியுள்ளனர். குறிப்பாக பவானி ஆற்றில் மணல் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுகிறது.
பவானி, சீனிவாசபுரம், எலவமலை, மூலப்பாளையம், ஆப்பக்கூடல், தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, ஜம்பை, காடையாம்பட்டி, சின்னமோளபாளையம், பெரியமோளபாளையம் உள்ளிட்ட இடங்களில் பவானி ஆற்றில் பகல் நேரங்களிலேயே மணல் கடத்தல் ஜோராக நடைபெறுகிறது.
இந்தநிலையில் பவானி ஜம்பையில் நேற்று சிலர் பகல் நேரத்திலேயே பவானி ஆற்றங்கரையில் வந்துசேர்ந்த மணலை சாக்கு மூட்டைகளில் கட்டிவைத்தார்கள். அதன்பின்னர் மாலையில் வேன், சரக்கு ஆட்டோ ஆகியவற்றை ஓட்டிவந்து சர்வ சாதாரணமாக மணல் மூட்டைகளை கடத்திச்சென்றார்கள்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, ‘கடந்த பல மாதங்களாக கிணறுபோல் ஆழமாக வெட்டி மணல் கடத்தினார்கள். தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மீண்டும் மணல் வந்து சேர்ந்துள்ளது. மறுபடியும் மணல் கடத்தல் அதிக அளவில் நடைபெறுகிறது. இரவு, பகல் பாராமால் வாகனங்களில் மணல் மூட்டைகளை கடத்தி செல்கிறார்கள்.
நாங்கள் தடுத்தாலும் எங்களை மிரட்டுகிறார்கள். எனவே வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து மணல் கடத்தலை தடுக்கவேண்டும். இதற்காக மணல் கடத்தல் கும்பல் வரும் வழியில் ஆழமான அகழிகள் வெட்டவேண்டும்.
இதேபோல் இறைச்சி மற்றும் கோழிக்கழிவுகளை வாகனங்களில் கொண்டுவந்து பவானி ஆற்றில் கொட்டுகிறார்கள். இதையும் தடுக்கவேண்டும்.‘ என்றார்கள்.