நிர்மலாதேவி உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர்: காவல் நீட்டிக்கப்பட்டதால் பேராசிரியர் முருகன் ஆவேசம்


நிர்மலாதேவி உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர்: காவல் நீட்டிக்கப்பட்டதால் பேராசிரியர் முருகன் ஆவேசம்
x
தினத்தந்தி 28 Aug 2018 11:15 PM GMT (Updated: 28 Aug 2018 7:45 PM GMT)

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு கோர்ட்டில் வருகிற 10–ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது. இதனால் கோர்ட்டு வளாகத்தில் முருகன் ஆவேசம் அடைந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை செல்போனில் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் 3 பேரும் விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, 3 பேருக்கும் வருகிற 10–ந்தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் வருகிற 6–ந்தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று காவல் நீட்டிக்கப்பட்ட பேராசிரியர் முருகன் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தவுடன் ஆவேசத்துடன் கூறியதாவது:–

இந்த வழக்கில் ஒரு ஆரோக்கியமான விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். வக்கீல் வைத்து வாதாடுவதற்கு எனக்கு வாய்ப்பு தாருங்கள். 127 நாட்களுக்கு மேலாக என்னை சிறையில் அடைத்துவைத்து தற்கொலைக்கு தூண்டாதீர்கள். இந்த முயற்சிகள் என்னுடைய வாழ்வை இத்தோடு முடித்துக்கொள்வதற்கான திட்டமாக இருக்கிறது.

யாருடைய ஆதாயத்துக்காகவோ என் வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறார்கள். நான் செய்தது தவறு என்று நீதிமன்றத்தில் வாதாடுங்கள். நீதிமன்றம் தவறு என்று சொல்லட்டும், நீங்கள் யார் என்னை குற்றவாளி என்று சொல்வதற்கு?

இவ்வாறு அவர் ஆவேசத்துடன் கூறினார்.

உடனே போலீசார் அவரை அமைதிப்படுத்தி வேனில் ஏற்றிச் சென்றனர். நிர்மலாதேவி, முருகன் உள்பட 3 பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story