மணல் கடத்துவதாக லாரி உரிமையாளரை மிரட்டி ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
மணல் கடத்துவதாக கூறி லாரி உரிமையாளரை மிரட்டி ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த அத்தியூர் அருகே உள்ள கலங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 22) லாரி, டிராக்டர் உள்ளிட்டவைகளை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் இவர் தனது லாரி மற்றும் டிராக்டரை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு ஊசூர் வருவாய் ஆய்வாளர் அஸ்லம் பாஷா சென்றார்.
அவர் தினேஷ்குமாரிடம் நீங்கள் “லாரியில் மணல் கடத்தி உள்ளர்கள். இது தொடர்பாக உங்கள் லாரி மீது வழக்கு பதிய உள்ளேன்” என்று கூறியுள்ளார். இதனை கேட்ட தினேஷ்குமார் “நான் மணல் கடத்தலில் ஈடுபடவில்லை. எதற்காக வழக்கு பதிய உள்ளர்கள்” என கேட்டுள்ளார். அப்போது ஊசூர் வருவாய் ஆய்வாளர் அஸ்லம்பாஷா, நீ மணல் கடத்தியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என தினேஷ்குமாரை மிரட்டியுள்ளார். மேலும் லாரி மீது வழக்குப் பதியாமல் இருக்க ரூ. 40 ஆயிரத்தை லஞ்சமாக வருவாய் ஆய்வாளர் கேட்டுள்ளார்.
இருவருக்குள் நடந்த பேரத்தில் ஒரு வழியாக, தினேஷ்குமார் ரூ.25 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத தினேஷ்குமார் அது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தினேஷ்குமாரிடம் கொடுத்தனுப்பினர்.
அதன்படி நேற்று காலை 11 மணி அளவில் தினேஷ்குமார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஊசூர் வருவாய் ஆய்வாளர் அஸ்லம்பாஷாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, விஜய் மற்றும் போலீசார் அஸ்லம்பாஷாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story