இருதரப்பினர் இடையே மோதல்; 9 பேர் கைது புகார் கொடுத்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்


இருதரப்பினர் இடையே மோதல்; 9 பேர் கைது புகார் கொடுத்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2018 10:45 PM GMT (Updated: 28 Aug 2018 7:55 PM GMT)

புளியந்தோப்பில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு குமாரசாமி ராஜா தெருவை சேர்ந்தவர் பாலு என்ற பாலகிருஷ்ணன்(வயது 41). புளியந்தோப்பு கே.பி. பார்க் 4–வது பிளாக் பகுதியில் வசிப்பவர் தேவிகலா(35). இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் கடை வைப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவிகலாவின் 16 வயது மகள் கடைக்கு சென்றுள்ளார். அப்போது பாலு ஏற்கனவே இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்து அந்த சிறுமியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாய் தேவிகலாவிடம் தெரிவித்தார். இதனால் தேவிகலா தனது உறவினர்களுடன் சென்று பாலுவை தட்டி கேட்டார்.

பாலுவுக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் வந்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பேசின் பிரிட்ஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி, சப்–இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தகராறில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கொடுத்தனர்.

தேவிகலா கொடுத்த புகாரின் பேரில் பாலு என்ற பாலகிருஷ்ணன்(41). அவரது மனைவி வெங்கடேஸ்வரி(35), பாலுவின் தம்பி செந்தில் குமார்(39), மற்றொரு தம்பி அறிவழகன் (35), பாலுவின் அம்மா அன்பு(55) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அறிவழகனை தவிர மற்ற 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த மோதலில் பாலுவின் தம்பி அறிவழகன் காயம் அடைந்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் சரத்(25), கவியரசன்(26), தேவிகலா(35),ஜோதி(55), கவிதா(30) ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதற்கிடையே காயம் அடைந்த அறிவழகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தேவிகலா கொடுத்த புகாரின் பேரில் அறிவழகன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்றனர்.

ஆனால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நைசாக தப்பிச்சென்றார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story