தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரெயிலில் அடிபட்டு 2,300 பேர் உயிரிழப்பு: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்


தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரெயிலில் அடிபட்டு 2,300 பேர் உயிரிழப்பு: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:00 AM IST (Updated: 29 Aug 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரெயிலில் அடிபட்டு 2,300 பேர் உயிரிழந்து உள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

கோவை,

ரெயிலில் அடிபட்டு பயணிகள் இறப்பதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். கோவை ரெயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வரவேற்றார். இதில் தமிழக ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு ரெயில் விபத்துக்களை தவிர்ப்பது, பாதுகாப்பான ரெயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நாடகத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ–மாணவிகள், ரூட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கலைக்குழுவினர் ரெயிலில் அடிபட்டு இறப்பதை தடுப்பது குறித்து நாடகம் மூலம் அங்கு வந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அத்துடன் அங்கு வந்த பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:–

பொதுவாக கவனக்குறைவு காரணமாகத்தான் ரெயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் அதிகம் நடக்கிறது. ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வது குறைவு என்றாலும், தண்டவாளத்தை கடக்கும்போதுதான் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதுபோன்று காதில் ‘ஏர்–போன்’ மாட்டிக்கொண்டு செல்போன் மூலம் பாட்டுக்கேட்டபடி தண்டவாளத்தில் பலர் நடந்து செல்கிறார்கள். இதனால் பின்னால் ரெயில் வந்தாலும், ஹாரன் அடிக்கும்போது அவர்களுக்கு கேட்பது இல்லை.

இதுதவிர ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்த படி பயணம் செய்வது, ஓடும் ரெயிலில் ஏறுவது, ரெயில் நிற்கும் முன்பே இறங்குவது, ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது போன்றவைகளாலும் விபத்துகள் நடக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 2,300 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

எனவே இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 46 முக்கிய ரெயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று ரெயிலில் பயணம் செய்யும்போது பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும். குறிப்பாக ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிக நகை அணிந்தபடி ஜன்னல் ஓரத்தில் இருக்கும்போது, ரெயில் நிற்கும் பட்சத்தில் மர்ம நபர்கள் எளிதாக நகையை பறித்துவிட்டு சென்று விடுவார்கள்.

அதுபோன்று பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களையும் மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுபோன்று ரெயிலில் செல்லும்போது முன் பின் தெரியாத நபர்கள் கொடுக்கும் எந்த பொருட்களையும் வாங்கி சாப்பிடக்கூடாது. இதில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் ரெயிலில் நடக்கும் திருட்டு சம்பவங்களை எளிதாக தடுக்கலாம்.

தற்போது ரெயில் வரும்போது அதன் முன்பு நின்று கொண்டு செல்பி எடுப்பது அதிகரித்து விட்டது. செல்பி மோகத்தால் சிலர் ரெயிலில் அடிபட்டு இறந்தும் உள்ளனர். குறிப்பாக ஓடும் ரெயிலில் ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டு செல்பி எடுப்பதுதான் அதிகமாக இருக்கிறது. சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து உள்ளார். அவர் தனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் துக்கம் தாங்க முடியாமல் அந்த இளைஞரின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு அஜாக்கிரதையாக இளைஞர்கள் செயல்படுவதால் பெற்றோர்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் ரெயில் வரும்போது செல்பி எடுத்ததாக இதுவரை 112 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை ரெயில் நிலைய இயக்குனர் சரவணன், நிலைய மேலாளர் செந்தில் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story