பல்லடம் அருகே வகுப்பறையில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்


பல்லடம் அருகே வகுப்பறையில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்
x
தினத்தந்தி 29 Aug 2018 3:15 AM IST (Updated: 29 Aug 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே வகுப்பறையில் மாணவன் ஒருவன் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தி உள்ளது. வேறு பள்ளிக்கு மாற்றியதால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல்லடம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த பெண் ஒருவர் தனது சேர்ந்த 16–வயது மகனுடன் பல்லடம்–மங்கலம் சாலையில் உள்ள டி.எம்.டி.நகரில் வசித்து வருகிறார். இதையடுத்து அந்த மாணவர் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 பயாலஜி படித்து வருகிறான். மாணவனின் தாயார் திருப்பூர்அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளி தொடங்கியது. இதையடுத்து அந்த மாணவனும் சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றான். அந்த மாணவன் மதியம் வகுப்பறையில் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவன் அருகில் இருந்த சகமாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அந்த மாணவனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அந்த மாணவன் சாணிபவுடர் (வி‌ஷம்) குடித்து இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் விரைந்து சென்று மாணவன் வி‌ஷம் குடித்தற்கான காரணம் என்ன? என்று மற்ற மாணவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் ‘‘சதீஸ்குமாரை பள்ளி ஆசிரியர்கள் திட்டியதாகவும், மேலும் எழுதி வாங்கிகொண்டு பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அருள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்ற இருப்பதாகவும் கூறியதால் மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக’’ தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.நாட்ராயன் மற்றும் பல்லடம் கல்வி மாவட்ட அலுவலர் கனகமணி ஆகியோர் கூறும்போது ‘‘ நாங்கள் யாரையும் பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கட்டாயமாக மாற்றுவதில்லை. அவர்கள் விருப்பப்பட்டு எழுதி கொடுத்தால் மட்டுமே மாற்றுவோம். ஏற்கனவே 4 மாணவர்கள் அருள்புரம் பள்ளிக்கு செல்வதாக எழுதிக்கொடுத்துள்ளனர். அதேபோல் சதீஸ்குமாரும் எழுதிக்கொடுத்தான். அதன் பேரிலேயே அருள்புரம் அரசு பள்ளிக்கு மாற்றினோம்’’ என்றனர். அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story