புகையிலை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
புகையிலை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
பெங்களூரு,
புகையிலை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
புற்றுநோய்
பெங்களூரு மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சம்பத்ராஜ் தலைமையில் தலைமை அலுவலகத்தில் உள்ள கவுன்சில் கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ் பேசும்போது கூறியதாவது:-
புகையிலை பயன்பாட்டை குறைக்க பட்ஜெட்டில் தேவையான அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புகையிலை விற்பனையை தடை செய்ய இந்த ஒட்டுமொத்த மன்றமே ஆதரவாக இருக்கிறது. அதனால் இதுபற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டியது அவசியம். புகையிலையால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் உண்டாகின்றன. இது மக்களை பெரிய அளவில் பாதிப்படைய செய்கிறது.
இவ்வாறு சிவராஜ் பேசினார்.
தடை விதிக்க வேண்டும்
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி, “ஓட்டல், மதுபான விடுதி, உணவகங்களில் புகையிலை, சிகரெட் பிடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். கிளப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் அதற்கு என்று தனி அறை இருந்தாலும், அங்கும் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. புகையிலை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்று மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும்“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் நேத்ரா நாராயண், “கஞ்சா போதைப்பொருளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காக்களில் போதைப்பொருள்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. புகையிலைக்கு தடை விதிக்க வேண்டும்“ என்றார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதைத்தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் சாந்தகுமார், உமேஷ்ஷெட்டி, சத்தியநாராயணா ஆகியோர் பேசும்போது, “பள்ளி-கல்லூரிகள் இருக்கும் பகுதியில் 100 மீட்டர் நீளத்திற்குள் சிகரெட் விற்பனை செய்யக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனாலும் இந்த விதிமுறையை யாரும் பின்பற்றுவது இல்லை. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.
Related Tags :
Next Story