அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியது: உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சாவு
துமகூரு அருகே அரசு பஸ் மீது நேற்று அதிகாலையில் தனியார் பஸ் மோதியது. இதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
துமகூரு,
துமகூரு அருகே அரசு பஸ் மீது நேற்று அதிகாலையில் தனியார் பஸ் மோதியது. இதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4 பேர் சாவு
துமகூரு மாவட்டம் கல்லம்பெல்லா அருகே நேற்று காலையில் கர்நாடக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த தனியார் பஸ், அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பஸ்களும் சேதமடைந்தன. பஸ்களில் பயணித்த பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கல்லம்பெல்லா போலீசார் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
உதவி சப்-இன்ஸ்பெக்டர்
மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தனியார் பஸ்சில் பயணித்த கார்வாரை சேர்ந்த ரமேஷ் நாயக் (வயது 55), பெங்களூரு சககாராநகரை சேர்ந்த நிகிதா (35), தனியார் பஸ் டிரைவரான பெங்களூருவை சேர்ந்த தனராஜ் (54), அரசு பஸ்சில் இருந்த எமகனமரடியை சேர்ந்த தீபக் மன்னனவர் (36) ஆகியோர் இறந்தது தெரியவந்தது. இதில் ரமேஷ் நாயக் கார்வாரில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியதும், தீபக் மன்னனவர் நீர்ப்பாசனத்துறையில் அரசு ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் கார்வாரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அரசு பஸ்சை, முந்த முயன்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதியதால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் கல்லம்பெல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story