எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்குகள் ரத்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பெங்களூரு,
எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 வழக்குகள் தாக்கல்
கர்நாடக பா.ஜனதா தலைவராக இருப்பவர் எடியூரப்பா. இவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, பெங்களூரு ராசேனஹள்ளியில் அரசு நிலத்தை அரசாணையில் இருந்து விடுவித்தார். இதுபோல் இன்னும் பல இடங்களில் அரசு நிலங்களை எடியூரப்பா விடுவித்தார். இவற்றில் நில முறைகேடு நடந்து இருப்பதாக கூறி லோக்ஆயுக்தா கோர்ட்டில் தனித்தனியாக 15 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், தன் மீதான நில முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய கோரி எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி உத்தரவு
அந்த மனு மீது விசாரணை முடிவடைந்ததை அடுத்து 28-ந் தேதி(நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று அந்த சிறப்பு கோர்ட்டு அறிவித்தது. அதன்படி நேற்று சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. எடியூரப்பா மீதான 15 நில முறைகேடு வழக்குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய நிம்மதியை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை கர்நாடக பா.ஜனதா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மீது இருந்த பெங்களூரு ராசேனஹள்ளி நில விடுவிப்பு உள்பட 15 வழக்குகளை சிறப்பு கோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதை பா.ஜனதா வரவேற்கிறது. எடியூரப்பாவின் எதிரிகள் அவர் மீது ஏதாவது பொய் வழக்குகளை போடுவதையே தொழிலாக கொண்டு செயல்பட்டனர்.
புகழுக்கு களங்கம்
அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தினர். இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளுக்கு சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பே சரியான பதில் ஆகும். எடியூரப்பாவை கடுமையாக விமர்சித்தவர்கள் தற்போது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எடியூரப்பாவிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story