கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றத்தை கண்டித்து மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம்


கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றத்தை கண்டித்து மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றத்தை கண்டித்து மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குளித்தலை,

குளித்தலை அருகே அய்யர்மலையில் குளித்தலை அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி அறிவியல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ், தமிழ்துறையில் துறைத்தலைவராக இருந்த ஈஸ்வரன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி கல்லூரிக்கும், தமிழ்துறையின் உதவி பேராசிரியராக இருந்த ஜெகதீசன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதனூர் கல்லூரிக்கும் நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இணை பேராசிரியர் கோவிந்தராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்து மீண்டும் அவர் குளித்தலை அரசு கலைக் கல்லூரியிலேயே பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கக்கோரி கணினி அறிவியல் துறையை சார்ந்த வகுப்பு மாணவ–மாணவிகள் மட்டும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில், கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை கைவிடுவதாகவும், நாளை ( இன்று) மீண்டும் போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துவிட்டு மாணவ, மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


இதன்பின்னர் நேற்று மதியம் 3 மணியளவில் இரண்டாம் கட்டமாக, தமிழ்துறை பேராசிரியர்களின் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் குளித்தலை கிளைத் தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இக்கல்லூரி தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் கல்லூரி வாயிலின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை கலைந்துசென்றனர். குளித்தலை அரசு கலைக்கல்லூரி முன்பு இரண்டு கட்டமாக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story