கியாஸ் கசிந்து தீப்பிடித்தது: தொட்டிலில் தூங்கிய 5 மாத குழந்தை கருகி சாவு நெல்லை அருகே பரிதாபம்


கியாஸ் கசிந்து தீப்பிடித்தது: தொட்டிலில் தூங்கிய 5 மாத குழந்தை கருகி சாவு நெல்லை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:00 AM IST (Updated: 29 Aug 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் கசிந்து வீட்டில் தீப்பிடித்தது. இதில் தொட்டிலில் தூங்கிய 5 மாத குழந்தை உடல் கருகி பரிதாபமாக இறந்தது.

நெல்லை, 

கியாஸ் கசிந்து வீட்டில் தீப்பிடித்தது. இதில் தொட்டிலில் தூங்கிய 5 மாத குழந்தை உடல் கருகி பரிதாபமாக இறந்தது. நெல்லை அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

5 மாத குழந்தை

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற 5 மாத பெண் குழந்தை உண்டு.

சுரேஷ் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். குழந்தை பிரியதர்ஷினி வீட்டில் உள்ள தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தது. அப்போது, சுகன்யா கியாஸ் அடுப்பில் பால் காய்ச்சினார். பால் அடுப்பில் காய்ந்து கொண்டு இருந்த போது, சுகன்யா வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தீயில் கருகி பலி

அப்போது கியாஸ் கசிந்து தீப்பிடித்தது. அந்த தீ தொட்டிலில் பற்றியது. தீ மள, மளவென எரிந்து குழந்தை உடலில் பற்றியது. இதில் அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் உரக்க அழுதது. குழந்தையின் சத்தத்தை கேட்டு சுகன்யா ஓடி வந்தார். ஆனால் அதற்குள் குழந்தை பிரியதர்ஷினி தீயில் கருகி பரிதாபமாக இறந்தது. குழந்தையை பார்த்து சுகன்யா கதறி அழுதார்.

இதுகுறித்து உடனடியாக பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story