ஆக்கியில் ஒரு ‘மேஜிக்மேன்’


ஆக்கியில் ஒரு ‘மேஜிக்மேன்’
x
தினத்தந்தி 29 Aug 2018 10:55 AM IST (Updated: 29 Aug 2018 10:55 AM IST)
t-max-icont-min-icon

இன்று (ஆகஸ்டு 29-ந்தேதி) தேசிய விளையாட்டு தினம்.

தனது அயராது பயிற்சியினால் இந்திய ஆக்கி அணியை உலகளவில் அடையாளப்படுத்திய தயான் சந்த்தின் பிறந்த நாள்தான், தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

தயான் சந்தின் இயற்பெயர் தயான் சிங் ஆகும். இவர் 29-8-1905 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரில் பிறந்தார். இவரது தந்தை சாமேஸ்வர் சிங்தாய் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். ராணுவ ஆக்கி அணியிலும் இடம்பெற்றிருந்தார். பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த தயான் சந்தின் குடும்பம், இறுதியாக ஜான்சி நகரில் குடியேறியது.

சிறுவயதில் தயான் சிங்குக்கு விளையாட்டின் மீது அதிக நாட்டமில்லை. மல்யுத்தம் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பிற சிறுவர்களுடன் சேர்ந்து ஜான்சி நகர வீதிகளில் விளையாடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும்.

தனது 16-வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் சேர்ந்த பின்புதான் இவருக்கு ஆக்கி விளையாட்டின் மீது அதிக ஆர்வம் வந்தது. ராணுவ பணிக்கு இடையில் ஒவ்வொரு நாள் இரவிலும் ஆக்கி பயிற்சியில் ஈடுபடுவதற்காக நிலவு வரும் வரை காத்திருந்து பயிற்சி பெற்றார். இதனால் இவர் தயான் சந்த் என்று அழைக்கப்பட்டார். இந்தி மொழியில் சந்த் என்றால் நிலவு என பொருளாகும்.

அதே போல, நிலவைப் போல் எதிர்காலத்தில் பிரகாசிப்பார் என்று அவருடய பயிற்சியாளர் கருதியதால் அப்பெயர் வந்தது என்று கூறுவோரும் உண்டு.

தயான் சந்த் தனது படைப்பிரிவுகளுக்கு இடையேயான ஆக்கி போட்டியில் சிறப்பாக விளையாடியதால், இந்திய ராணுவ அணிக்கு தேர்வானார். இந்த அணி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற 21 போட்டிகளில் பங்கேற்று 18 வெற்றிகளையும், 1 தோல்வியும் கண்டது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்த போட்டிகளில் தயான்சந்த் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்திய ராணுவம், ‘லான்ஸ் நாயக்’ என்ற பதவியை வழங்கி பெருமைப்படுத்தியது.

தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய தயான்சந்த், இந்திய ஆக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 1928-ல் நெதர்லாந்து நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. அங்கு நடந்த ஆக்கி போட்டிகளில் தயான் சந்த் ஆடுகள மைய முன்னோக்கி வீரராக விளையாடினார்.

பல அணிகளை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, நெதர்லாந்தை சொந்த மண்ணில் சூறையாடியது. இந்த ஒலிம்பிக்கில் தயான் சந்த் 14 கோல்கள் அடித்தது பாராட்டப்பட்டது. நெதர்லாந்து ஆங்கில பத்திரிகை ஒன்று அவரை, ‘மேஜிக் மேன் தயான் சந்த்’ என்று புகழ்ந்தது.

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல் நகரில் 1932-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணியானது தயான் சந்தின் சகோதரர் ரூப் சிங்கின் தலைமையில் பங்குபெற்றது. தயான் சந்த் தனது சகோதரர் ரூப் சிங் உடன் சேர்ந்து சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றார்.

அதே ஆண்டில் இந்திய ஆக்கி அணியானது இங்கிலாந்து, இலங்கை, ஜெர்மனி முதலிய நாடுகளில் பல்வேறு ஆக்கி டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிகளை குவித்தது. அதில் இந்திய அணி வீரர்கள் மொத்தமாக 338 கோல்கள் அடித்தனர். தயான் சந்த் மட்டும் 133 கோல்கள் அடித்து உலகை வியக்க வைத்தார். உலகளவில் சிறந்த ஆக்கி வீரர் என பெயர்பெற்றார்.

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் 1936-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணியானது தயான் சந்தின் தலைமையில் பங்குபெற்றது. அதிலும் தயான் சந்த் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தங்கம் வென்று தந்தார். இதன்மூலம், இந்திய ஆக்கி அணியானது தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் சாதனை புரிந்தது. தயான் சந்த் இந்திய ஆக்கியின் தங்க மகன் ஆனார்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லர், ஜெர்மனி குடியுரிமை தருவதாகவும், ஜெர்மனி ராணுவத்தில் பணி வழங்குவதாகவும் கூறி தயான் சந்தை இழுக்க பார்த்தார். ஆனால், தயான் சந்த் சிறு புன்னகையுடன் மறுத்துவிட்டார்.

தயான் சந்த் 400-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 1000 கோல்களை அடித்து சாதனை படைத்தார். இவருக்கு ராணுவத்தில் ‘மேஜர்’ பதவி வழங்கப்பட்டது. சர்வதேச ஆக்கியில் இருந்தும், ராணுவத்தில் இருந்தும் ஓய்வு பெற்று, ஆக்கி பயிற்சியாளராக தனது பணியை தொடங்கினார்.

ஒருமுறை பார்வையாளர் ஒருவர், ‘உங்கள் ஆக்கி ஸ்டிக்கில் ஏதோ உள்ளது. எனது வாக்கிங் ஸ்டிக்கை வைத்து உங்களால் ஆக்கி விளையாட முடியுமா?’ என்று தயான் சந்திடம் சவால்விட்டார். சிறிதும் தயங்காத தயான் சந்த் வாக்கிங் ஸ்டிக்கையும் வைத்து சிறப்பாக விளையாடி பல கோல்கள் அடித்து பிரமிக்க வைத்தார்.

ஆக்கியில் அரிய பல சாதனைகளை படைத்த தயான் சந்த் தனது 74-வது வயதில் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு பத்ம பூஷண் விருதை வழங்கி பாராட்டியது. இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதினை வழங்கி இவரை கவுரவப்படுத்தியது.

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் தயான் சந்துக்கு சிலை நிறுவப்பட்டு உள்ளது. 4 கைகள் மற்றும் 4 ஹாக்கி மட்டைகளுடன் வடிவமைக்கப்பட்ட சிலை, அவரின் அசாத்திய திறமையை பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறது.

ஆக்கி போட்டியில் இந்திய அணியை அடையாளப்படுத்திய ஜாம்பவான் தயான் சந்தை முன்மாதிரியாக வைத்துதான் உலகளவில் பல ஆக்கி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றால் அது நம் தேசத்துக்கு பெருமை தானே...!

- இ.ஜான் பார்த்திபன், உடற்கல்வி இயக்குநர்


Next Story